மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 18 தொகுதிகளில் தி.மு.க-வுடன் நேரடியாக மோதுகிறது.
அ.தி.மு.க-வின் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், ஜி பிரேம்குமார் (ஸ்ரீபெரும்புதூர்), எஸ். பசுபதி (வேலூர்), ஆர். அசோகன் (தர்மபுரி), எம். கலியபெருமாள் (திருவண்ணாமலை), முன்னாள் எம்.எல்.ஏ ஆர். குமரகுரு (கள்ளக்குறிச்சி), பி. அருணாச்சலம் (திருப்பூர்), டி. லோகேஷ் தமிழ்செல்வன் (நீலகிரி), சிங்கை ஜி ராமச்சந்திரன் (கோவை), ஏ. கார்த்திகேயன் (பொள்ளாச்சி), பி. கருப்பையா (திருச்சி), என்.டி. சந்திரமோகன் (பெரம்பலூர்), பி. பாபு (மயிலாடுதுறை), பனங்குடி ஏ சேவியர்தாஸ் (சிவகங்கை), ஆர். சிவசாமி வேலுமணி (தூத்துக்குடி). சிம்லா முத்துச்சோழன் (திருநெல்வேலி) மற்றும் பாசிலியன் நசரேத் (கன்னியாகுமரி) இடம்பெற்றுள்ளனர்.
புதுச்சேரி தொகுதி, புதுச்சேரி இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி. தமிழ்வேந்தனை கட்சி பரிந்துரை செய்துள்ளது.
அதே போல, இந்த பொதுத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வின் மகளிர் அணி துணைச் செயலாளர் யு. ராணி நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி ராஜினாமா செய்ததை தொடர்ந்து விளவங்கோடு தொகுதி காலியானது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை மார்ச் 20-ம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மார்ச் 21-ம் தேதி 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 16 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார்.
அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, எஸ்.டி.பி.ஐ, ஃபார்வர் பிளாக் கட்சிக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, அ.தி.மு.க இந்த மக்களவைத் தேர்தலில் 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க தனது பரம எதிரியான தி.மு.க-வுடன் 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.
தி.மு.க தனது கூட்டணியில் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அதில், 18 தொகுதிகளில் அ.தி.முக-வுடன் நேரடியாக மோதுகிறது. இதன் மூலம், தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க 14 தொகுதிகளில் மோதுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“