மதுரையில் அ.தி.மு.க பொன்விழா மாநாடு வலையங்குளம் அருகே பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்தும் அ.தி.மு.க தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க மதுரை வந்ததால் மதுரை புறநகர் பகுதி போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. மாநாட்டில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் அளிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்த மாநாடு என்று பேசினார்.
அ.தி.மு.க பொன்விழ எழுச்சி மாநாட்டில் இன்று நடைபெற்ற டாப் 10 நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்களை இங்கே காணலாம்.
1.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் தொடக்கமாக காலை 8.30 மணிக்கு மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர அ.தி.மு.க கொடியை ஏற்றினார். எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவப்பட்டன. புறாக்களை பறக்கவிட்டார். பின்னர் ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மாநாட்டுப் பந்தலையும், அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டிருந்தது.
அ.தி.மு.க மாநாட்டுப் பந்தலையும், அ.தி.மு.க அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
2.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
3.
1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜெயலலிதாவின் சபதம் ஆகியவை குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.
4.
அ.தி.மு.க மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல தொலைக்காட்சி புகழ் ரோபோ சங்கர், காமெடி நடிகர் ராமர், செந்தில், ராஜலட்சுமி உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். செந்தில் மற்றும் ராஜலட்சுமி பாடல் பாட ரோபோ சங்கர் டிரம்ஸ் வாசித்தார். மாநாட்டில் எம்.ஜி.ஆரின் குரலில் நடிகர் ரோபோ சங்கர் பேசி மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரையும் நகைச்சுவையாக சிரிக்க வைத்தார்.
5.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் “தலைசிறந்த தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கண் துஞ்சா கழகப் பணி எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அணியும், மனம் துஞ்சா மக்கள் பணி எனும் தலைப்பில் அ.தி.மு.க நிர்வாகி நடிகை விந்தியா தலைமையிலான அணியும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
6.
மாநாட்டி நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூச்சிரைக்க ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். முன்னதாக எடப்பாடியார் சேலம் இரும்பல்ல.. சிலுவம்பாளையம் செங்கரும்பு" என முன்னாள் அமைச்சர் வளர்மதி அடுக்கு மொழியில் கவிதை பாடினார்.
7.
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொன்விழா மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று வசுலீக்கிறார்கள். இது ஸ்டாலின் குடும்பத்துக்கு தினமும் 10 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க-வை கடுமையாகச் சாடினார்.
8.
மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்த மாநாடு என்று பேசினார். ஆனாலும், அ.தி.மு.க மாநாட்டு திடலில் 3 லட்சம் தொண்டர்களுக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
9.
மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. ஸ்டாலின் அவர்களே! உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” என்று தி.மு.க்.கஎச்சரிக்கை விடுத்தார்.
10.
அ.தி.மு.க மாநாட்டில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என நடைபெற்று வருகிறது எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”