ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற விரும்புவதாக சபாநாயகர் அப்பாவு கற்பனையாகக் கூறியதாகக் குற்றம் சாட்டி அ.தி.மு.க நிர்வாகி பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் அவதூறு புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம். அப்பாவு மீது அ.தி.மு.க நிர்வாகி பாபு முருகவேல் அளித்த கிரிமினல் அவதூறு தனிப் புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், சட்டத்தின்படி புகாரை மேலும் தொடருமாறு முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். அ.தி.மு.க சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஆர்.எம். பாபு முருகவேல் தாக்கல் செய்த குற்றவியல் அசல் மனுவை தள்ளுபடி செய்யும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் ஆற்றிய உரைக்கு மனுதாரர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் தி.மு.க-வில் சேரத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கூறியதாக அவர் குற்றம் சாட்டினார்.
அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கில், “அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாற அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அந்தச் செய்தி தி.மு.க தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குகூட முறையாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அப்பாவு பார்வையாளர்களிடம் பேசினார்” என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சபாநாயகர் அப்பாவு, “ஸ்டாலின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்ததாகவும், மக்கள் ஆணையைப் பெறாமல் ஆட்சிக்கு வர மறுத்துவிட்டதாகவும் கூறியதாகவும்” மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது அ.தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கற்பனையான சம்பவம் என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அ.தி.மு.க-வின் அலுவலகப் பொறுப்பாளர் என்ற வகையில், சபாநாயகருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் கீழ் கிரிமினல் அவதூறு குற்றங்களுக்காக தனிப் புகார் அளித்தார். இந்த புகார் முதலில் எழும்பூரில் உள்ள 2-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், இது போன்ற புகார்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்த புகார் திருப்பி அனுப்பப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கை உரிய நீதிமன்றத்துக்கு மாற்றும் அதிகாரம் கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரரை வற்புறுத்தியும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முதலில் மனுதாரருக்கு இ-ஃபைலிங் முறையில் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உயர் நீதிமன்றப் பதிவாளரை (தகவல் தொழில்நுட்பம்) அணுகுமாறு உத்தரவிட்டார். இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, புகாரை கோப்பாக எடுத்துக்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“