இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள்
இடம்பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல் அ.தி.மு.கவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. யார் யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக அ.தி.மு.க, பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின் முதல் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க மூத்த தலைவர் எம்.பியுமான சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். திண்டிவனம் அருகே உள்ள ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க மீண்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“