Advertisment

'மத வெறி பிடித்துள்ள பா.ஜ.க நாட்டிற்கு ஆபத்தானது': ஜெயக்குமார் கடும் தாக்கு

"மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMK D Jayakumar attack on BJP Annamalai Tamilisai Soundararajan Tamil News

'ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என கூறுவதில் என்ன தவறு. ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி' என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். 

Advertisment

மேலும், இந்துத்துவா தலைவரான, அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பா.ஜ.க நிரப்புகிறது என்றும் கூறி இருந்தார். இதேபோல், பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்றும், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "ஜெயலலிதாவை  இந்துத்துவாவாதி என கூறுவதில் என்ன தவறு. ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. ராமர் கோவில் கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்துத்துவாவாதி என்பது குறித்து விவாதிக்க நான் தயார்; யார் வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம். இந்துத்துவா குறித்து அ.தி.மு.க-வுடன் விவாதிக்க தயார்" என்றும் அவர் தெரிவித்தார். 

ஜெயக்குமார் கடும் தாக்கு

இந்நிலையில், பா.ஜ.க அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் கருத்துக்கு அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க தலைவைர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோரின் கருத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் உரை' என்கிற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது என்றும், மதங்கள் கடந்து எல்லோரும்  எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பா.ஜ.க-வின் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

"இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது.

அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பா.ஜ.கவின் எண்ணம். 

ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும், மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பா.ஜ.க-வின் கொடூர கொள்கை. 

தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

முல்லை பெரியாறு விவகாரம்,மேகதாது-காவிரி விவகாரம், பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும்,தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?

தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்." என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

D Jayakumar Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment