Advertisment

அரசு நிகழ்ச்சிகளில் இனியும் டி சர்ட் அணிந்து உதயநிதி பங்கேற்றால் வழக்கு: அ.தி.மு.க எச்சரிக்கை

"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா?. சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம்." என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMK D Jayakumar on deputy cm udhayanidhi stalin wearing T Shirts in TN Govt functions Tamil News

"கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல." என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இனியும் பொது நிகழ்ச்சிகளில் கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ள டி சர்ட் அணிந்து வந்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அ.தி.மு.க தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

சென்னை பெரம்பூரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா?. சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை.

கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டி சர்ட் பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது டி சர்ட் போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது டி சர்ட் போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்." என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Udhayanidhi Stalin Tn Government D Jayakumar Tamil Nadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment