கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஒன்றாக இணைந்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.
டி.டி.வி தினகரன் பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசுகையில், "ஓ.பி.எஸ்.ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. டெண்டர் படைதான் அங்கே இருக்கிறது. அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள்; அச்சாணியை பற்றி பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி விசுவாசமிக்க தொண்டர்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். அச்சாணி முறிந்து போனவர்கள்; டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள். கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்." என்று கூறினார்.
ஓ.பி.எஸ் பேச்சு
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும். மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆன நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. சம்பவம் நடந்த இரவு யார் மின் இணைப்பை துண்டித்தார்கள்? துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்?". கோடநாடு வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடைபெறுகிறது" என்று கூறினார்.
ஜெயக்குமார் தாக்கு
இந்நிலையில், ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரன் போராட்டம் குறித்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திரை மறைவில் சந்தித்து வந்த தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் இன்று பொது வெளியில் சந்திக்கின்றனர் என்றும், டி.டி.வி தினகரனை மாயமான் என விமர்சித்த ஓ.பி.எஸ் உடன் இன்று கைகோர்த்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா, தினகரனை எதிர்த்து தான் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். தற்போது அவர்களிடம் மீண்டும் இணைந்துள்ளார். எப்படிப்பட்ட சந்தர்பவாத அரசியலை பன்னீர்செல்வம் அரங்கேற்றி உள்ளார் என்பது மக்களும் அதிமுக.,வினரும் அறிவார்கள். டி.டி.வி தினகரனை மாயமான் என விமர்சித்த ஓ.பி.எஸ் உடன் இன்று கைகோர்த்துள்ளார்
திரைமறைவில் ஒன்று சேர்ந்தவர்கள் தற்போது பொது வெளியில் ஒன்று சேர்ந்துள்ளனர். பொது வெளியில் இணைந்து செயல்படுவதாக பன்னீர் செல்வமும், தினகரனும் நாடகம் போடுகின்றனர். நாடகத்தை நடத்துவதற்கு கோடநாடு விவகாரத்தை ஓ.பி.எஸ் கையில் எடுத்துள்ளார்.
கோடநாடு வழக்கில், குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு. இந்த வழக்கில் ஐஜி தலைமையில் 90 சதவீத விசாரணை முடிந்த நிலையில், ஏஎஸ்பி விசாரணைக்கு மாற்றியது ஏன்?. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தது தி.மு.க.,வை சேர்ந்த வழக்கறிஞர்கள் தான்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.