அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன், அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று அதிமுக தொண்டர்களுடன் பேசிய விடீயோவை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கட்சியில் இருந்து சசிகலாவிடம் போனில் பேசியவர்களை நீக்கி நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், சசிகலாவின் ஆடியோ வெளியீடு நிற்கவில்லை.
இந்த சூழலில்தான், இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கக்ட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை கடுமையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல, அதிமுகவில் பிற மாவட்ட நிர்வாகங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தேனி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களின் அதிமுக மாவட்ட மற்றும் நகர அமைப்புகள் சசிகலாவுக்கு எதிரான தீர்மானங்களை ஏற்கவில்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் பலரும் சசிகலாவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது தெரியவண்துள்ளது.
இது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: “சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அதிமுகவில் கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே ராஜு, சி.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, ஆர்.வைதிலிங்கம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உறுதியில்லாமல் இருக்கிறார்கள். மேலும், இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தக்கூடாது என்று விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தனர்.
அதிமுக மாவட்டக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் நிர்வாகக் காரணங்களுக்காகவும், கட்சித் துணை விதிகளுக்கு கட்டுப்படுவதற்கும் கட்சி தலைமையகத்திற்கு அனுப்பப்படுவது என்பது பொதுவான நடைமுறையாக உள்ளது. டெல்டாவில் உள்ள ஒரு மாவட்ட நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களிடம் சின்னம்மா (சசிகலா) ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். பிறகு, ஏன் நாம் அவருக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். நாம் அவரைப் புறக்கணித்து கட்சிப் பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் சசிகலாவை புறக்கணிக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் சசிகலாவுக்கான அரசியல் வாய்ப்புகளைக் குறைப்பதை அவர் எதிர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள். ஏன் இ.பி.எஸ்-ஐ மகிழ்விக்க சசிகலாவை தேவையில்லாமல் எதிர்க்க வேண்டும். இபிஎஸ் போலல்லாமல், சசிகலாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற ஓபிஎஸ் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கட்சியில் உள்ள நிலைமையைக் கூறுகிறார்கள்.
சசிகலா விஷயத்தில் வேறுபட்டுள்ள அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் நிலைப்பாடு குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “இவையெல்லாம் சின்ன சின்ன உள்கட்சி பிரச்னைகள். கட்சி தீர்மானங்கள் உள்ளூர் பிரச்சினையை கருத்தில் கொண்டு அந்தந்த நிர்வாகிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. சிலர் சசிகலா பிரச்சினையை முக்கிய பிரச்னை என்று கருதி தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர், அவர் கட்சியில் உறுப்பினராக இல்லாததால் அவரை புறக்கணிக்கிறார்கள்” என்று தெரிவிக்கின்றனர்.
எப்படியானாலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மற்ற மாவட்டங்களில் நிறைவேற்றுவதில் சில மாவட்ட நிர்வாகிகள் வேறுபட்டிருக்கிறார்கள். இதன் மூலம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் சசிகலாவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.