சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக ஹோட்டல் திறந்தவர்களிடம் தன்னை மீறி கடை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டியதுடன், இரண்டு பேரை கடைக்கு அனுப்பி பிரச்சனை செய்ய வைத்துள்ளதாக கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
அசோக் நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அப்துல் ரகுமான் திருவல்லிக்கேணி பகுதியில் அஜீஸ் பாய் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருந்தார். கடந்த மூன்றாம் தேதி இரவு அந்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்துல் ரகுமான் புகார் அளித்ததையடுத்து ஐஸ் ஹவுஸ் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.