பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கிய அதிமுக: கட்சி மாறி வாக்கு சேகரிப்பு

திமுக எம்.பி செந்தில்குமார், பாமகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளைத்தான் திமுக இணைத்துள்ளார். ஆனால், அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்தோ பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கி அதிமுகவில் இணைத்திருக்கிறார். இது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

pmk, aiadmk, local body elections, பாமக, அதிமுக, கடலூர், பண்ருட்டி, ஊரக உள்ளாட்சி தேர்தல், cuddalore, panruti, local body polls

அண்மையில் தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்த நிகழ்வைப் பற்றிய பேச்சு ஓய்வதற்குள், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தரப்பில், பாமக வேட்பாளரையே அலேக்காக தங்கள் பக்கம் தூக்கிக்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த பாமக, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பாமக தலைமை ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது. அப்போது, அதிமுக தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. பாமக தரப்பில், கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. உள்ளாட்சி தேர்தலில்தான் தனித்து போட்டியிடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் சில பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அதே போல, சில நாட்களுக்கு முன்பு, தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில், தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகி அ.சத்தியமூர்த்தி தலைமையில், அந்த மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதுமட்டுமில்லாமல், தாங்கள் பாமகவில் இருந்து விலகுவதற்கு காரணம் அன்புமணியின் ஆதிக்க நிலையே காரணம் என்று குற்றம்சாட்டினர்.

இதனிடையே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குபதிவு அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து 2ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது. அதில், பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஆதிலட்சுமியும் திமுக சார்பில் ஜெயபிரியாவும் தேமுதிக சார்பில் ராதிகாவும் பாமக சார்பில் மச்சகாந்தி மணிவண்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதில் பாமக வேட்பாளர் மச்சகாந்தி கடந்த சில நாட்களாக பாமக நிர்வாகிகளுடன் பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில்தான், பா.ம.க. வேட்பாளர் மச்சகாந்தியின் கணவரும் பாமக இளைஞரணி இணை செயலாளருமான மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் பாகவிலிருந்து விலகி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக்கொண்டவர்களை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்த விவகாரம் இதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை, பாமக வேட்பாளர் மச்சகாந்தியின் கணவர் மணிவண்ணன் அதிமுகவில் இணைந்ததையடுத்து, மச்சகாந்தி அதிமுகவினருடன் இணைந்து அதிமுக வேட்பாளர் ஆதிலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாமக வேட்பாளராக இருந்துகொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எம்.பி செந்தில்குமார் பாமகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளைத்தான் திமுகவில் இணைத்து வருகிறார். ஆனால், அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்தோ பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கி அதிமுகவில் இணைத்திருக்கிறார். இது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk draws pmk candidate to aiadmk party in local body polls

Next Story
Tamil News updates: 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com