அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து, 10 நாட்களுக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கர்நாடகத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கேற்ப, கட்சியின் மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. எனவே இதன் தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
இதுபோல் ஏற்கனவே பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் இ.பி.எஸ்., தரப்பு கூறியது. மேலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை முடிவு செய்யவேண்டும் என்பதால் இதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், 10 நாட்களில் அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக் கோரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil