Edappadi-k-palaniswami | cm-mk-stalin: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற தி.மு.க-வின் பகல் கனவு பலிக்காது' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில், 'குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்து பாதி பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்
யாராலும் ஏற்க முடியாத ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதித்து தாய்மார்களை தி.மு.க அரசு ஏமாற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறவே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“