அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 2016ல் மறைந்த நிலையில், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெற்றது. இதன்பிறகு நடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தது.
ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பு நிலவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசி வந்தார். அண்ணாமலையின் பேச்சுக்கு அ.தி.மு.க தலைவர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார். ஆனாலும், தனது பாணியிலான பேச்சை அண்ணாமலை தொடர்ந்திருந்தார்.
இதற்கெல்லாம் சேர்த்து வைத்து ட்விஸ்ட் கொடுத்து இருந்தார் தற்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெறாது என உறுதிப்பட அறிவித்தார். இதனால், பா.ஜ.க-வினர் விழிபிதுங்கிப் போகினர். பா.ஜ.க-வுக்குள் இருந்த அண்ணாமலைக்கு எதிரான எதிர்ப்பலை முழக்கமாக மாறியது.
இருப்பினும், கோவை தொகுதியில் போட்டி கண்ட அண்ணாமலையும், ஒட்டு மொத்த பா.ஜ.க வேட்பாளர்களும் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். இது அ.தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவை கொண்டுவந்தது. பல தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடத்தைப் பிடித்தது. 40ல் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும், அ.தி.மு.க அதன். வாக்கு வங்கியை ஓரளவுக்கு தக்க வைத்து இருந்தது. தற்போது அ.தி.மு.க-வின் போக்கஸ் 2026 சட்டசபை தேர்தலாகா இருந்து வருகிறது.
இந்த சூழலில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க அரசை குற்றம்சாட்டினால் பா.ஜ.க தலைவர் என்னை குறைசொல்கிறார். பொய்களை மட்டுமே பேசுபவர்தான் தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். மத்திய அரசில் இருந்து ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அண்ணாமலை பேசுகிறார். மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் பா.ஜ.க எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது." என்று அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் பா.ஜ.க சார்பில் 'தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்' என்ற தலைப்பில் பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ''யாரையோ பிடித்து, உழைக்காமல், பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்னத் தெரியும். அண்ணாமலை மைக்கைப் பார்த்தாலே பொய்ப் பேசுவார். வாய் மட்டும்தான் அவருக்கு இருக்கிறது" என எடப்பாடி விமர்சித்துப் பேசியிருக்கிறார். எடப்பாடி அவர்களே, சிலுவம்பாளையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்திருந்தார்.
இப்போது தி.மு.க-வில் இருக்கும் ஒரு அமைச்சர், அப்போது அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர். அவருடைய கைக் காலைப் பிடித்து அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்ற மனிதர் நீங்கள். எனவே, தயவு செய்து எனக்கு நேர்மையைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். அதே கொங்கு பகுதியின் உங்கள் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். உங்களின் அருமை, பெருமை எல்லாம் எனக்குத் தெரியும். கூவத்தூரில் நடந்தது கட்சிப் பொதுச் செயலாளரை தேர்வு செய்த நிகழ்வா. அது ஒரு அலங்கோலம்.
கூவத்தூரில், எந்த எம்.எல்.ஏ-வுக்கு மாதம் மாதம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக நடந்த பெட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து, காலில் விழுந்து, பதவியைப் பெற்ற எடப்பாடி, 10 ஆண்டு காலமாக 10 பைசா கூட வாங்காமல் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்ட இந்த அண்ணாமலையை பற்றிப் பேச, எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அகந்தையில் பேசுகிறார் எடப்பாடி. 2026-ல் தூக்கி எறியப்படுவீர்கள். எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனக் கூறும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
2019-ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது, நம்முடன் கூட்டணியில் இருக்கும் தலைவர், எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, 'பிரதமர் வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யுச் செல்லும் நிகழ்வில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் முதல்வர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ளலாம்' என அழைப்பு கொடுத்தார். அப்போது எடப்பாடி, 'தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசி வரவேண்டும்' எனக் கூறினார். அன்றிலிருந்து மானமுள்ள இந்த அண்ணாமலை கூட்டணிக்காகக் கூட எடப்பாடி பழனிசாமியை எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
நான் இந்தக் கட்சியில் கிளைத்தலைவராக, ஒன்றியத் தலைவராக பணியாற்றவில்லைதான்... ஆனால், நான் இந்தக் கட்சியில் சேர்ந்தது, இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகதான். பெண்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் கட்சி, ஊழல் இல்லாத கட்சி, வலிமையான கட்சி, சாதாரண மனிதரை அதிகாரத்துக்கு கொண்டுவரும் கட்சி என இந்தக் கட்சி மீது ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும். எனவே, நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இரண்டும் நமக்கு பரம எதிர்கள்தான். அதில் தெளிவாக இருக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவருக்கு எதிராக மாவட்டம்தோறும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எதிரான முழக்கங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.