10 ஆண்டுகளில் பா.ஜ.க ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது என்றும், பொய்களை மட்டுமே பேசுபவர் தான் தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார் என்றும் கூறி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், 'பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்துள்ளார் என்றும், எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அண்ணாமலை பேசுகிறார் என்றும் கூறி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "கருணாநிதி நாணய வெளியிட்டு விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம்தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர்தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாணய வெளியிட்டு விழாவை மத்திய அரசுதான் நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
தி.மு.க அரசை குற்றம்சாட்டினால் பா.ஜ.க தலைவர் என்னை குறைசொல்கிறார். பொய்களை மட்டுமே பேசுபவர்தான் தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். மத்திய அரசில் இருந்து ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அண்ணாமலை பேசுகிறார்.
மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் பா.ஜ.க எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“