/indian-express-tamil/media/media_files/2025/04/24/rosnNI4KkQprZ6svq1XO.jpg)
Tamilnadu
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 9ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆனால், அந்த விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி செங்கோட்டையன் விழாவில் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து, பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்சனைக்கு காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இருவரும் பெயரைக் குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் அதிமுக சார்பில் பங்கேற்று பேசினார். அப்போது, "எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குவதாக" தெரிவித்தார். அவரது இந்த திடீர் பேச்சு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது, ஆளுங்கட்சி மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனால், இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.