அதிமுக செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல், சசிகலா விடுதலை, கட்சிக்குள் எழுந்துள்ள முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, ஒற்றைத் தலைமை சர்ச்சை எனப் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பரபரப்பு சூழ்நிலைகளுக்கும் மத்தியில் இந்தக் கூட்டம் நடப்பதால், பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விஷயங்களுக்கு எல்லாம் இன்றைய கூட்டத்தில் தீர்வு எட்டப்படும் என்றும் பேசப்பட்டு வந்தது.
பரபரப்பு காட்சிகள்!
கூட்டம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, துரைகண்ணன், நிலோஃபர் கபில் ஆகியோர் முதல்வர் எடப்பாடியை தனித்தனியாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் திடீரென சந்தித்தார். ஏற்கனவே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் திடீர் டெல்லி விசிட் அடித்திருக்கின்றனர்.
இதற்கிடையே, செயற்குழு கூட்டத்துக்கு வந்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ``ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே' என்ற பதாகைகளை ஏந்தியபடியும், செயற்குழுவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை அணிவித்து, கையில் வாள் கொடுத்தும், ஓபிஎஸ் முகமூடி அணிந்தும் அதகளப்படுத்தினர்.
தீர்மானங்கள்!
இதற்கிடையே, செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். தாய்மொழி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை.
* மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும்.
* தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்
* அதிமுகவினர் ஒற்றுமையாக உழைத்து, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம்.
* கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு
* மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்
* கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு
வலியுறுத்தல்
* கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு
என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது.
அக். 7-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: செயற்குழுவில் முடிவு
இதற்கிடையே செயற்குழுவில் முதல்வர், துணை முதல்வர் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா; ஆனால் என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா’ என ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக கூறப்படுகிறது.
அதற்கு இபிஎஸ், ‘இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான்’ என குறிப்பிட்டதாக தெரிகிறது. ‘இந்த ஆட்சியில் மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன்’ என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.இதன் மூலமாக தனது முதல்வர் வேட்பாளர் கனவை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அதிமுக.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அக்டோபர் 7-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து இதே தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்கள்’ என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"