“சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர் அவரை தவறாகப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா கூறியுள்ளது அதிமுவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சியில் ஒரு நிகழ்சியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி குறித்தும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது. உதயநிதியின் பேச்சுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, உதயநிதி மீது நேற்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக மரியாதைக் குறைவாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதாகக் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கூறிய கோகுல இந்திரா, “ஒரு கட்சியில் தலைவராக இருந்தவர்(சசிகலா). இன்றைக்கும் அவர் எங்கிருந்தாலும் மரியாதைக்குரிய வகையிலே போற்றக்கூடியவர். அவர்கள் (சசிகலா) அம்மாவோடு (ஜெயலலிதா) துணையாக இருந்து ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது மாதிரி பேசுவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். அவர் தண்டனைக் காலம் முடிவடைந்து ஜனவரி 27ம் தேதி விடுதலையாக உள்ளார். இந்த சூழலில்தான், சசிகலா தவவாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் அவரை உதயநிதி ஸ்டாலின் தவறாகப் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்த பிறகு, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் இருந்து நீக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.