“பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை” என்றும், “சீமான் ஏதோ பிதற்றிக் கொண்டு, கூட்டத்தை சேர்த்துக்கொண்டு கைதட்டினால், அவர் பேசுவது நல்லது அல்ல” என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை (ஜனவரி 23) நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி 2026-ல் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம், சீமான் பெரியார் குறித்து அவதூறாக விமர்சித்து வருவது குறித்தும் ஆரியமும் திராவிடமும் ஒன்று என விமர்சிப்பது குறித்தும் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்துப் பேசிய கே.பி. முனுசாமி, “பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை; பெரியாரைப் பற்றி விமர்சனம் செய்வதற்கே, பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்துவிட்டார். எங்களைப் போன்று ஒரு சாதாரண நிலையில் இருந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களெல்லாம் இன்று அரசியல் ரீதியாக பல்வேறு பொறுப்புகளுக்கு வந்து, இப்போது உங்களிடையே பேசுகின்ற வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் (சீமான்) ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார், முப்பாட்டன் என்கிறார், என் தாத்தா என்கிறார், பாட்டி என்கிறார், இவர்களெல்லாம் பேசிவிட்டு சமூகத்தில் சுதந்திரம் அடைந்த பின்பும் கூட ஒரு குறிப்பிட்ட மக்களிடத்திலே தான் இந்த ஆட்சியும் தமிழகமும் இருந்தது, அந்த குறிப்பிட்ட சமூகத்தில் இருந்தும் மக்களிடத்தில் இருந்தும் அவர்களிடத்திலே இருக்கின்ற குறைகளை எடுத்துச் சொல்லி, மூட பழக்க வழக்கங்களில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலையை மாற்றி, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற நிலையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் என்பதை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி கரடு முரடான வார்த்தைகளைச் சொல்லி, மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். அவருடைய மாணவராக இருந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாருடைய கொள்கைகளை சட்டமாக இயற்ற வேண்டும் என்று சொன்னால், நாம் அரசியல் கட்சி உருவாக்கி தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தான், தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக இயற்ற முடியும் என்று பேரறிஞர் அண்ணா மக்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு, பெரியார் ஆண்டவன் இல்லை என்று சொன்னார், பேரறிஞர் அண்ணா ஒருவனே தேவன் என்று சொன்னார், அதற்கேற்றவாறு கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தவுடன் பெரியாருடைய கொள்கைகளைத்தான் பேரறிஞர் அண்ணா சட்டமாக உருவாக்கினார். இந்த வரலாறு இன்றும் தமிழகத்தில் 50 வருடமாக திராவிட ஆட்சி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்.
சீமான் ஏதோ பிதற்றிக் கொண்டு, கூட்டத்தை சேர்த்துக்கொண்டு கைதட்டினால், அவர் பேசுவது அவ்வளவு நல்லது அல்ல, அவருக்கும் நல்லதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கே.பி. முனுசாமி காட்டமாகக் கூறினார்.