ஊடகங்களில், இணையதளங்களில், சமூக ஊடகங்களில் நாளுக்கு ஒரு செய்தி பொழுதுக்கு ஒரு செய்தி, மணிக்கொரு செய்தி என்று அதிமுகவுக்குள் நடைபெறும் பூசல்களைப் பற்றி செய்திகள் வெளிவரத் தொடங்கியதால் அதிமுக தலைமை திடீரென ஒரு அவசரமான முடிவை எடுத்தது. அது என்னவென்றால், அதிமுக தொடர்பாக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதுதான் அது. ஆனால், இப்படியான செய்திகள் எல்லாம் வருவது எல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவை அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே வரத் தொடங்கிவிட்டன என்பதே உண்மை.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடித்து சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விடுதலையானார். அவர் தேர்தலில் ஒரு பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறினார். ஆனால், தேர்தல் முடிவில் அதிமுக தோல்வியைத் தழுவியதை அடுத்து, அவர் அதிமுகவை மீட்பேன் என்று அதிமுக தொண்டர்களிடம் போனில் பேசும் ஆடியோக்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகிறார். இதனால், கோபமடைந்த அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து சசிகலாவுடன் போனில் பேசியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர். அப்போதே, குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. சசிகலா செல்வாக்கு இல்லாதவர் என்றால் அதிமுகவின் இரட்டை தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் ஏன் அச்சப்படுகிறார்கள். சரி சசிகலாவுடன் போனில் பேசுபவர்களை எல்லாம் நீக்க வேண்டும் என்றால் எத்தனை பேரை நீக்குவார்கள் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், அந்த கேள்விகள் சாதாரண தொண்டர்களிடம் இருந்து அமுங்கிய குரலில் வெளிப்பட்டது. அதே நேரத்தில், ஓபிஎஸ்-ஐ விமர்சித்ததற்காக பாமகவையும் அன்புமணியையும் விமர்சித்த அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
சசிகலாவைப் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எல்லோரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். சசிகலாவைப் பற்றி ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர்கள் பெரும்பாலும் மாநில அரசியல் செயல்படுபவர்களாக இருந்தனர். இதனால், அவர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் நிலைப்பாட்டை அவரவர் அளவில் பிரதிபலித்து வந்தனர். அதிமுக தேர்தலில் தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துவிட்டது. அதிமுக தலைமையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று அனைவரும் பிரதிபலிக்கவே செய்தார்கள்.
அண்மையில் சி.வி.சண்முகம் தேர்தல் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று கூறியபோது, ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும், பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டு கூட்டணியில் பிளவு ஏற்படாமல் தடுத்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த வாரம், தமிழ் தொலைக்காட்சி செய்தி ஊடகத்துக்கு நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, தேர்தல் முடிவு எதிர்பார்த்ததுதான். அதற்கு தலைமை அமைத்த கூட்டணி வியூகம் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.. ஒரு கட்சிகள் உடன் இருந்ததால் சில வாக்களிக்கவில்லை. இன்னொன்று 10.5% உள் இடஒதுக்கீடால் மற்ற சமூகத்தினர் வாக்களிக்கவில்லை. என்று கூறினார்.
அது மட்டுமில்லாமல், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலாதான் என்று கூறினார். மேலும், 1968ல் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். ஆனால், அதே கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கினார். அதே போல, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று அன்வர் ராஜா கூறினார்.
உண்மையில், இந்த நேர்காணலில் அன்வர் ராஜா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துதான் பேசினார் என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே புரிபட்டது. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி தன்னை சசிகலா முதலமைச்சராக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தான் முதலமைச்சராக்கினார்கள் என்று கூறினார். இபிஎஸ்-சின் கருத்துக்கு மாற்றாக கட்சியில் இருந்து வேறு யாராவது கருத்து தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த முறை கருத்து தெரிவித்தது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா. இப்போது, என்ன செய்வது என்று தெரியமால் இபிஎஸ் - ஓபிஎஸ் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இதனிடையே, அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன், நீட் விவகாரத்தில் கூட்டணி கட்சியான பாஜகவின் இரட்டை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டு மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார். அன்வர் ராஜா சொன்னது அதிமுகவின் உட்கட்சி புகைச்சல் என்றால் மைத்ரேயன் சொன்னது கூட்டணிக்குள் புகைச்சல் விவகாரம்.
இப்படி கட்சியில் இருந்து ஆளுக்கு ஒரு கருத்தை ஊடகங்களில் பேசினால் கட்சி கடுமையாக பாதிக்கும் என்று சூழலின் ஆபத்தை உணர்ந்த அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ், அதிமுக சார்பில் ஊடகங்களின் விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிக்கை வெளியிட்டனர்.
அதிமுகவின் முன்னாள் எம்.பி.க்கள் அன்வர் ராஜாவும் மைத்ரேயனும் தெரிவித்த கருத்துக்காக அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏனென்றால், இருவரும் கட்சிக்கு விசுவாசமான மூத்த தலைவர்கள். இருவரும் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றால் அதை சந்திக்கவும் தயாராக இருப்பதாகவே வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக கிராமத்தில் சொல்வார்கள், இது போல பேச்சுகள், வதந்திகள் எழும்போது உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்பார்கள். அதிமுக தலைமை, ஊர்வாயை மூட முடியாது. அதனால், உலை வாயை மூட முடிவு செய்து அதிமுகவில் இருந்து யாரும் ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவித்தது. அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் மூலம் அதிமுகவில் கிளம்பும் போர்க்குரல்களை அதிமுக தலைமை அணைபோட்டு தடுத்துவிட முயற்சிக்கிறது. ஆனால், இந்த முடிவே அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மக்கள் முன்னாள் அதிமுக தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாமல் போகும் என்று அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கவலைப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.