அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவும், மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி துரை. கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. இவர், கந்தர்வக்கோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு சென்றவர்.
துரை. கோவிந்தராஜன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள வடக்கூரில் 1937-ம் ஆண்டில் பிறந்தவர். தி.மு.க உறுப்பினராக இருந்த இவர் 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபோது, தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இவர் 1977-ம் ஆண்டில் திருவோணம் தொகுதியிலும், 1984 ம் ஆண்டு தேர்தலில் திருவையாறு தொகுதியிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, 1984-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை தமிழக அரசின் கொறடாவாக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்த இவர் அக்கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் துரை. கோவிந்தராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மனைவி மீனாட்சி ஏற்கெனவே காலமாகி விட்டார். இவருக்கு மகன்கள் துரை.கோ. கருணாநிதி, துரை.கோ.பாண்டியன், மகள் திராவிடமணி ஆகியோர் உள்ளனர்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கோவிந்தராஜன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் துரை கோவிந்தராஜன் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அன்புசகோதரர் துரை கோவிந்தராஜன் கழகத்தின் மீதும், நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும், என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர். கழக தொண்டர்களை அன்போடு அரவணைத்து செல்லக்கூடியவர். கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாதது.
துரை கோவிந்தராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அவரது இறுதி ஊர்வலம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தஞ்சை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு – அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது. ஆனால், தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பா.ஜ.க திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க-வையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது. அ.தி.மு.க-வை யாரும் மிரட்டவும் முடியாது. அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர தயார் என அறிவித்துள்ளது நல்ல கருத்து. அதனை நான் வரவேற்கிறேன் – தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன்.
அ.தி.மு.க தலைமைக்கு ஓ.பி.எஸ்-ஸும் ஆட்சி நிர்வாகத்தில் இ.பி.எஸ் என பழைய நிலை ஏற்பட்டால் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு இது தொண்டர்களுக்கான இயக்கம் தொண்டர்களை யாரும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது. எங்களை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப்படத்தன்மை இருக்க வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சட்ட விதிகளை உருவாக்கினாரோ அந்த சட்ட விதிகளுக்கு ஒரு சின்ன மாசு, பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இப்போதைய தர்மயுத்தம் எனக் கூறினார்.
மறைந்த துரை.கோவிந்தராஜன் இறுதி சடங்கில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.