அதிமுக (அம்மா - புரட்சிதலைவி அம்மா ) பொது குழுவிற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு தடை கோரியும், பொது குழுவில் அதிமுக பெயரை பயன்படுத்த கூடாது என்றும் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை செபம்பர் 11ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து வெற்றிவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், அப்துல் குத்தூஸ் அமர்வு, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என தெரிவித்ததது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ராஜூவ் சக்தேர், சதீஸ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தங்களை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதை ரத்து செய்யக்கோரி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும்; தேர்தல் ஆணையம் இரட்டை இலை தொடர்பான வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென இருதரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.