அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சூறாவளியாக சுழன்று வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்துள்ளது. பொதுகுழு கூட்டத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக முழக்கமிட ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ, படங்களை இங்கே காணலாம்.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒற்றைத் தலைமை யார் என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோதல் எழுந்தது. இதில் இ.பி.எஸ் கை ஓங்கிய நிலையில், ஓ.பி.எஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தொடை விதிக்க கோரிய வழக்கில், தனி நீதிபதி பொதுக்குழுவை நடத்தலாம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று உத்தரவிட்டார். ஆனால், இரவோடு இரவாக மேல்முறையீடு செய்யப்பட்டு, விடிய விடிய நடந்த விசாரணை முடிவில், பொதுக்குழு நடத்தலாம், ஆனால், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 23) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வெளியே ஆயிரக் கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். பொதுக்குழு கூட்டத்துக்கு சுமார் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு இ.பி.எஸ் முன்னதாகவே வந்தடைந்தார். அப்போது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவரை வரவேற்று முழக்கமிட்டனர். அதே நேரத்தில், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்-ஐ ஆதரித்து முழக்கமிட்டனர்.
பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பி.எஸ் வந்தபோது, சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி போன்ற சீனியர்கள் பக்கத்தில் இருந்தும் யாரும் அவரை வரவேற்கவில்லை. அதே நேரத்தில், இ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தபோது சீனியர்கள் பலரும் வந்து வரவேற்றனர். ஓ.பி.எஸ் பொதுக்குழு மேடைக்கு வந்ததும் இ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து முழக்கமிட்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும், அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம், இந்த பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாகக் கூறினார். மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில், ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும். அதில், ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதே போல, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார்.
இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானங்களை புறக்கணித்து ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்வதாகக் கூறி ஓ.பி.எஸ் உடன் வெளிநடப்பு செய்தார். இதனால், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக்குழுவுக்கு வந்திருந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் இ.பி.எஸ் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அணி வகுத்து முழகமிட ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்ய பெரும் களேபரமாக முடிவடைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.