Advertisment

அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு; திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ADMK

AIADMK General Committee Case verdict

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதனை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்த விபரம் வருமாறு;

2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்புதல் பெறப்பட்டு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது, இந்த பொதுக்குழு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்குகளின் இறுதி விசாரணை தொடங்கியது. 7 நாட்கள் இந்த வழக்கில் இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படன. இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று(வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உத்தரவிட்டனர்.

அதேபோல், கட்சியிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்தார்.

தீர்ப்பை கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

AIADMK General Committee Case verdict
AIADMK General Committee Case verdict

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் அருணகிரி, பகுதி கழக செயலாளர் தண்டபாணி, பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர்  முருகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் ராஜா, மாமன்ற உறுப்பினர் கோ.கு.அம்பிகாபதி மற்றும் ஜே.பாலமூர்த்தி,  லால்குடி ஒன்றியம் குணசீலன், கணபதி, வட்ட கழக செயலாளர்கள் தெய்வமணிகண்டன், கே.பி.சங்கர், ஆபிரகாம் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்று கொண்டாடினர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment