சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைபாளருமான எடப்பாடி பழனிசாமி, “டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்ப்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கு அடிமை இல்லை” என்று கூறினார்.
சென்னை வானகரத்தில் ஞாயிற்றுகிழமை அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும், முதலவர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.
இந்த கூட்டத்திற்கு, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,400 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், நீட் தேர்வு விலக்கு மற்றும் திமுகவை விமர்சித்தும் என மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் இதரப் பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தலில் சரிவை சந்தித்தோம். மக்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் என பிரித்துப் பார்த்து வாக்களிக்கின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வரவேண்டுமென தீர்மாணிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். குறுகிய காலத்தில் கூட்டணி அமைந்ததாலும் பிரசாரத்தில் சரியாக ஈடுபட முடியாததாலும் தான் சரிவு ஏற்பட்டது. என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974-இல் முதன்முதலில் அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதைப் பிடுங்கி எரிந்தனர். அன்று ஆரம்பித்த கொடிக்கம்ப பிரச்சனை இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால்தான் அவர் அரசு ஊழியர்களைத் தூண்டிவிடுகிறார்.
சிலர் கட்சியே துவங்காமல் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரனும் அவரது குடும்பத்தினரும் எவ்வளவுப் பாடாய்ப்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.