The supreme court has said that there is no ban on the AIADMK general council to be held on July 11: அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11இல் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-இல் நடைபெற்றது., அந்தப் பொதுக்குழுவில் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11இல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை. யாருக்கேனும் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒருநபர் அமர்வு பொதுக்குழு தொடர்பாக முடிவெடுக்கும். இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள்(ஓபிஎஸ், இபிஎஸ்) பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துங்கள். பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசிக்கொள்ளுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9:15 மணிக்கு நடைபெறும் என, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 16 அம்சங்கள் விவாதிக்கப்பட இருப்பதாகதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டமிட்டபடி, ஜுலை 11இல் அதிமுக பொதுக்குழு நடந்தால், கட்சியின் இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்படுவார். எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.