AIADMK General Committee meeting Tamil News: அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் “ஒற்றை தலைமை” என்கிற கோஷம் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க.-வில் உள்ள 90 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 60 மேற்பட்டோரும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 பேரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது. அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தின்போது மோதல்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில், கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருப்பதால் போக்குவரத்து சீரமைப்பு, காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்தும் அதுகுறித்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், "அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். போலீசின் கேள்விகளுக்கு மதியம் 1 மணிக்குள் அ.தி.மு.க., பதில் அளிக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்." என்று கூறி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் போது போலீஸ் சார்பில், பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினை எனில் ஓ.பி.எஸ்., தரப்பு போலீசை அணுகலாம் என கூறியுள்ளது. மேலும் காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழுவை கூட்டுவதில் உள்ள பிரச்னை குறித்து போலீசை அணுகுவோம். பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பெஞ்சமினுக்கு அதிகாரம் இல்லை. 3வது நபர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் அதிமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கேட்ட 31 கேள்விகளுக்கான பதிலை திருவேற்காடு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அளித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.