அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனது வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வாமாக தாக்கல் செய்துள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், பின்னர், 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஜனவரி 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி 16-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி ஓ.பி.எஸ் தரப்பு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து, இரு தரப்பும் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் அடுத்து தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு பிப்ரவரி 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"