கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக வழக்கை 15-ம் தேதி (இன்று) தள்ளி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நேரமின்மை காரணமாக வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது, இ.பி.எஸ் தரப்பில், நாளைக்கு வேண்டாம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு காலவதியாகிவிட்டது என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைக்கிறோம். இதற்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு இருதரப்பிற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி 40-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"