அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றால் நீக்கவும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஓ. பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும், இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்று (ஜனவரி 10) நான்காவது நாளாக விசாரணை நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரம் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைத்தார். அப்போது இ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களின் முக்கிய அம்சங்கள்:
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பதவிகளை உருவாக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளதென்றால அந்த பதவிகளை நீக்கவம் அதற்கு உண்டு.
- ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தின் 1 முதல் 3 வரையிலான கருத்தின்படி ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் எனும்போது, ஓபிஎஸ் தரப்பு இதனை மறுப்பது நகை முரணாக உள்ளது.
- அ.தி.மு.க-வில் இல்லாத ஒரு பதவியை புதிதாக கொண்டுவரவில்லை; ஏற்கெனவே இருந்த பொதுச் செயலாளர் பதவி மீண்டும்கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது பொதுக்குழுதான். பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்பது ஓ.பி.எஸ்0க்கு தெரியாதா?
- மாற்றம் கட்சி நலனுக்காகவே இருக்க வேண்டும்; தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்காக அல்ல. பொதுக்குழுவை என் விருப்பப்படி கூட்டியது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் 4 பேர் விருப்பத்தின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. கட்சியின் செயல்பாடுகளுக்கு ஓ.பி.எஸ் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
- இரண்டு பதவிகளை உருவாக்கும்போது தொண்டர்களிடம் செல்லும்படி கூறாத ஓபிஎஸ், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கும்போது மட்டும் தொண்டர்கள் போகும்படி கூறுவது ஏன்? பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று ஓ.பி.எஸ்-ஸுக்கும் தெரியும்.
- தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அனைத்து விஷயங்களுக்கும் அவர்களிடம்தான் செல்ல வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களிடம் செல்ல முடியாது என்பதால்தான் பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் முகமாகதான் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். 94..5% உறுப்பினர்கள் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க ஆதரவு அளித்திருந்தனர். கட்சியி்ன் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் பொது்க்குழுவுக்கு அதிகாரம் உண்டு.
- பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அ.தி.மு.க-வில் இல்லாத பதவியை புதிதாக உருவாக்கவில்லை. பொதுச் செயலாளர் பதவி என்பது ஏற்கெனவே இருந்த ஒன்றுதான் என்று இ.பி.எஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, இவ்வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
நாளை மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வைத்தியநாதன், விஸ்வநாதன் ஆகியோர் வாதிட உள்ளனர். உச்ச நீதிமன்றம் நாளையே இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"