18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த சூடு ஆறுவதற்குள், அடுத்த பதார்த்தமாக கட்சியின் சட்டவிதி மாற்றப்பட்டது செல்லும் என தேர்தல் ஆணையம் விருந்து படைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, டிசம்பர் 29, 2016 அன்று கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2017 ஜனவரியில் தேர்தல் ஆணையத்தை நாடிய முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டவிதிகளின் படி, கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படைத் தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி டிச.6, 2016 அன்று உறுப்பினர்களாக இருந்தவர்களை அடிப்படையாக கொண்டு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட மனு அளித்தார். இம்மனு ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நிலுவையிலேயே இருந்தது.
இதனிடையே தர்மயுத்தத்தை ஆரம்பித்த ஓ.பி.எஸ்., எடப்பாடி அணியுடன் வந்து சேர்ந்தார். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 9, 2017லில் நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்றும், அவர் செய்த நியமனங்கள் நீக்கங்களை ரத்து செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகள் ஒழிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதுப் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய கே.சி.பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் தன் மனு நீண்ட காலமாக நிலுவையிலேயே இருப்பதாக குறிப்பிட்டார். கே.சி.பழனிசாமியின் மனுவை ஏழு வாரத்திற்குள் விசாரித்து தனது முடிவை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். தரப்பினரின் கருத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது. வழக்கு தொடர்பாக அனைவரின் கருத்துக்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி தனது வழங்கி உள்ளது. அதில், "அ.தி.மு.க. கட்சியில் செய்யப்பட்டுள்ள புதிய சட்டதிருத்ததை ரத்து செய்ய முடியாது. மேலும் இவ்விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் உட்கட்சி தேர்தல் நடத்துவது எங்களின் அதிகார வரம்பிற்குள் வராது!" எனக் கூறி, பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. ஒரே வாரத்தில், 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு, சட்டவிதிகள் மாற்றத்தில் தீர்ப்பு என தங்களுக்கு சாதகமான இரண்டு லட்டுகளை லவட்டியுள்ளது அ.தி.மு.க.!
தேர்தல் ஆணையத்தின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, "அ.தி.மு.க சட்டவிதி திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 30 நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது. அதிமுக தலைமை பொறுப்புக்கு தற்போது நிறைய போட்டி உள்ளது. தேர்தல் நடத்தினால் மட்டுமே கட்சி ஒன்றுப்பட்டு இருக்கும்!" என்றார்.
எது எப்படியோ, தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் அ.தி.மு.க.வினர் டபுள் தீபாவளி கொண்டாடுகின்றனர். எனினும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு ஒன்றையே இன்னமும் இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்ப்பாளர்கள் முக்கியமாக நம்பியிருக்கிறார்கள்.