அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 17) அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை (மார்ச் 18) இ.பி.எஸ். மனுத் தாக்கல் செய்தார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவர் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் சனிக்கிழமை தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர்.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டது.
பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதி குமரேஷ் பாபு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) காலை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், அ.தி.மு.க சார்பில் விஜயநாராயண் ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் வழக்கறிஞர்கள், பொதுக்குழு தீர்மானங்களை ரத்துசெய்யக் கோரிய வழக்கில் பதில் மனுவுக்கு அவகாசம் கேட்டு பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தனர். இன்று மாலையே வேட்புமனு நிறைவு பெற்றதாகக் கூறி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்று வாதிடப்பட்டது.
இதற்கு இ.பி.எஸ். தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய நாங்கள் அவகாசம் கோரவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று அறிவித்துவிட்டு, இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர்.
மார்ச் 17-ம் தேதி பொதுக்குழு வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இதுவரை யாரையும் அங்கீகரிக்கவில்லை. அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்கின்றன. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே கடிதங்களை அனுப்புகிறது. ஜெயலலிதாவே பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 18-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி முடிவு என்று அறிவித்துள்ளனர். 36 மணி நேரத்தில் 20 மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து முன்மொழியவும், வழிமொழியவும் எப்படி கோர முடியும்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில், வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதா?
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான அவசரகதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
அ.தி.மு.க-வின் கட்சி விதிமுறைகளை மீறி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறார்கள். தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், ஒரே வேட்பு மனு பெறப்பட்டது என்று முடிவை அறிவித்துவிடுவார்கள். அதேபோல், இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாததாகிவிடும்.
பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும் கலைக்கப்படவில்லை. அந்த இரு பதவிகளும் தற்போது சட்டப்படி உள்ளன. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தவறு” என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அ.தி.மு.க கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண், “பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியின் பங்கு முக்கியம். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது.
ஓ.பி.எஸ். தரப்பினர் பொதுக்குழுவை எதிர்த்து நான்கு முறை உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடமும், மூன்று முறை அமர்வு நீதிமன்றத்திலும் முறையிட்டு தோல்வியடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் கூறவில்லை.
சூழ்நிலைகள் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது அல்ல; கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த பங்கும் இல்லை. பொதுக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது” என்று வாதிட்டார்.
.இ.பி.எஸ் தரப்பில் வாதிடுகையில், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத்தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது.
கட்சிக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்னைகளை கையாள முடியும். அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர். ஜூலை 11 பொதுக்குழுவில் 2600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 2,100-க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க-வில் பொதுக்குழுதான் அதிகாரம் பெற்ற அமைப்பு. கட்சித்தலைமை அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறும் அவர்கள், இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சி செய்கிறார்கள்?
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன.
உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என மறுத்த பல நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. ஓ.பி.எஸ். தரப்பினர் வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.” என்று வாதிட்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை தடை செய்யக் கோரி ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமாக வாதிட்டனர்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, அதிமுக மற்றும் இ.பி.எஸ். தரப்பு, “கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும், வழக்குகளுக்காக காத்திருக்க முடியாது. மக்களவை தேர்தல் நெருங்குகிறது” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி, “பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 11-ம் தேதிக்கு முன்பு விசாரிக்கலாமா? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை, முடிவுகளை அறிவிக்காமல் இருக்கலாமே” என்று கூறினார்.
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு முடியும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கலாம் என்ற நீதிபதியின் யோசனைக்கு, இ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம்; ஆனால், முடிவுகளை அறிவிக்க வேண்டாம். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு மார்ச் 22-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22-ம் தேதி விசாரிக்கப்பட்டு 24-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.