அதிமுக தொடங்கப்பட்டு 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடுவது தொடர்பாக நடைபெற்ற கட்சி தலைமையின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர் தெரிவித்தாக அதிமுகவினர் பலரும் அவர் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் 1967ம் ஆண்டுக்கு பிறகு, 50 ஆண்டு காலம் திராவிடக் கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. அதில் அதிமுக மட்டும் 33 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. மாநிலத்தில் வலிமையான கட்சிகளில் ஒன்றாக திகழும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கட்சி என்று அதன் தலைவர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அக்டோபர் 17ம் தேதி 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அவருடைய மனைவி ஜானகி அம்மாள் முதல்வரானார். ஆனால், விரைவிலேயே அதிமுகவுக்குள் ஜானகி அணி - ஜெயலலிதா அணி என்று பூசல் ஏற்பட்டது. இறுதியில் ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றி ஆட்சியையும் பிடித்தார். டிசம்பர் 5, 2016ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.
இப்படி தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க கட்சிகளில் ஒன்றாக உள்ள அதிமுக தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, பொன்விழா கொண்டாடம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக 50 ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பொன்விழாவை எவ்வாறு கொண்டாடலாம் என்பது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 11ம் தேதி ஆலொசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அப்போது, அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்கு ராயப்பேட்டையில் இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும். கட்சிக்காக இந்த இடத்தை எழுதி வைத்துச் சென்ற எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று பலரும் பேசியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆருக்குப் பின், அவருடைய மனைவி ஜானகி தான், கட்சிக்காக இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, இதற்கு ஏதாவது உயில் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். வளமதியின் கேள்வியால் கூட்டத்தில் பெரிய சலசலப்பு எழுந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது கூட்டத்தில் இருந்த பலரும், வளர்மதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதில் உடன்பாடில்லாமல் பேசுகிறார் என்று கருதி அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என, பெயர் சூட்டப்படுவதாக ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது.
பொன்விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைதியாக முடிந்தாலும், கூட்டத்தில் வளர்மதி பேசிய கருத்து வெளியில் இருந்த எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பலரும் வளர்மதியை போனில் அழைத்து கடுமையாகப் பேசியுள்ளனர். எம்.ஜி.ஆர் தொண்டரும் குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவருமான ஓம்பொடி பிரகாஷ் சிங், முன்னாள் அமைச்சர் வளர்மதியை போனில் தொடர்புகொண்டு கடுமையாகப் விமர்சித்துள்ளார்.
அதோடு, அந்த பேச்சை அப்படியே பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று சர்ச்சை வெடித்தது. எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பலரும் வளர்மதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள ஓம்பொடி பிரகாஷ்: “அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அவர் கொடுத்த இடம்தான் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம். கட்சிக்காக அவர் செய்த காரியங்கள் சொல்லி முடிக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவரின் பெயரை, அவர் கொடுத்த இடத்தில் உருவான அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் பெயரை சூட்ட கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் எஸ்.பி வேலுமணியும், வைத்திலிங்கமும் வளர்மதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர வைத்துள்ளனர். வளர்மதி எதிர்த்தால் எம்.ஜி.ஆர் புகழ் மங்கி விடுமா? வளர்மதி இப்படி பேசியதைப் பற்றிய தகவல் அறிந்து, என்னை போன்ற லட்சோப லட்சம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். பொறுக்க முடியாமல் வளர்மதிக்கு போன் போட்டேன்; மிகக் கடுமையாக பேசினேன். அவரும் பதிலுக்கு பேசினார். கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுவிட்டு போனை வைத்தேன்.
எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு அதிருப்தி தெரிவித்த வளர்மதியின் பேச்சு குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். என்னுடைய முயற்சிகளையும், உணர்ச்சிகளையும், உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: “ஆலோசனை கூட்டத்தில், அதிமுக தலைமை கட்டடம் குறித்து ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், 'ஜானகி தான், இந்த கட்டடத்தை கட்சிக்கு கொடுத்தார்' என்றார். அப்போது குறுக்கிட்ட நான், 'அவர் உயில் ஏதாவது எழுதி வைத்திருந்தால், அதை எடுத்து பார்த்து தெளிவு பெறலாம்' என, ஆலோசனை சொன்னேன். அதற்கு யாரும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கூட்டத்தில் குறுக்கிட்டு நான் சொன்ன கருத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட நான் எதிர்ப்பு தெரிவிப்பது போல தவறான தகவல் வெளியே பரவியது. எம்.ஜி.ஆர் விசுவாசிகள என்று கூறிக்கொண்டு சிலர் என்னை மிரட்டுவது போல பேசுகிறார்கள்.
1973ம் ஆண்டு இறுதியில் நடந்த அதிமுகவின் திருவான்மியூர் மாநாட்டில், என்னை பேச வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். அந்த மேடையில் எம்.ஜி.ஆர் என்னை 5 நிமிடம் பாராட்டி பேசினார். அதற்கு பிறகுதான், வளர்மதியை ஊர் உலகம் அறியும். என் குழந்தைகளுக்கு பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். தான். நான் அவரால் எம்.எல்.ஏ. ஆனவள். எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையில் வளர்ந்த நான், அவருக்கு எதிராக கனவில் கூட நினைக்க மாட்டேன். கட்சிக்குள் இருக்கும் எதிரிகள் இத்தனை துாரம் சிந்தித்து பெயரைக் கெடுக்க முயல்வார்கள் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதிமுக நேற்று (அக்டோபர் 17) 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதற்கு எம்.ஜி.ஆர் தொண்டர்கள் கடும் விமர்சனம் வைத்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.