Advertisment

அதிமுக பொதுச்செயலாளர் என கல்வெட்டு திறந்த சசிகலா: கடுமையாக தாக்கிப் பேசிய ஜெயக்குமார்

அதிமுக பொன்விழா கொண்டாட்ட துவக்க நாளில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக தரப்பில் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK Golden Jubilee celebration, Sasikala vs OPS and EPS, Sasikala, o panneerselvam, Edappadi K Palaniswami, அதிமுக பொன்விழா கொண்டாட்டம், சசிகலா Vs ஓபிஎஸ் - ஈபிஎஸ், தொடங்கியது அரசியல் யுத்தம், அதிமுக, Sasikal inscription, Sasikala AIADMK golden jubilee celebration

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சசிகலா, ராமாபுரம் தோட்டத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவுக்கும் மரியாதை செலுத்தினார்.

Advertisment

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேசும் போது, தனக்கு எம்.ஜி.ஆர். தான் திருமணம் செய்து வைத்தார் என்றும் எம்.ஜி.ஆர் காலத்திலேயே தாம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரை நேரில் பார்க்காதவர்கள் எல்லாம் இன்று கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவதாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சை சாடினார். மேலும், எம்.ஜி.ஆர். கோயிலான ராமாவரம் தோட்டத்தில் நடக்கும் நிகழ்வு தான் உண்மையான பொன்விழா துவக்க நாள் விழா எனக் குறிப்பிட்டார்.

அதிமுக 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்து பொன்விழா கொண்டாடுவதை முன்னிட்டு, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவரும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, சென்னை, ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் மரியாதை செலுத்தியபின் அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார்.

அப்போது சசிகலா பேசியதாவது: “ஒருவர் அங்கே உள்ளவர்கள் சின்னம்மாவை தரக்குறைவாக பேசினார்கள் என்று சொல்லி அவர்களை கடுமையான வார்த்தைகளில் பேசினார். நான் அப்போது அவர்கள் செய்கிற தப்பை நாம் செய்யக்கூடாது. உண்மையான தலைவர் (எம்.ஜி.ஆர்) வழி வந்த அம்மாவைப் (ஜெயலலிதா) பின்பற்றிய தொண்டர்கள் அடுத்தவர்களை புண்படுத்த வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அதனால், இனிமேல் பொதுக்கூட்டங்களில் பேசும்போதுகூட யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தின் (அதிமுக) பொன்விழா ஆண்டு துவக்க நாளில் தலைவரின் தியாகராய நகர் இல்லத்தில் கழகக் கொடி ஏற்றியதற்கும் அதே போன்று, புரட்சித் தலைவரின் ராமாபுரம் தோட்டத்தில், பொன்விழா மலரை வெளியிட்டதற்கும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காரணம், இது தலைவருடைய வீடு, அது தலைவருடைய அலுவலகமாகவும் டி.நகரில் இருந்தார்கள். அதனால், இந்த நிகழ்ச்சியை இந்த இடத்தில் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால், நான் இங்கே வந்து கொடியேற்றினேன்.

இந்த நிகழ்ச்சிக்கு பொன்விழா மலரை வெளியிட்டோம். தலைவர் (எம்.ஜி.ஆர்) எப்போதுமே சொல்வார், நானும் ஒரு தொண்டன் தான் என்று சொல்வார். அதனால், தொண்டர்கள் இருந்து நடத்துகிற நிகழ்ச்சி ரொம்ப நல்லா சிறப்பா அமையும். அதே போல, அமைந்திருக்கிறது. அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று எம்.ஜி.ஆர் அப்போது பாடிய பாட்டு. இது இப்போது யாருக்கு பொருந்தும் என்று நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய, அதிமுக என்னும் ஆலமரத்திற்கு எம்.ஜி.ஆர் விதையாக இருந்ததாகவும் ஜெயலலிதா மழையாக இருந்ததாகவும் அதனால்தான் அதிமுக விருட்சமாக வளர்ந்தது என்று கூறினார்.

இது அதிமுகவின் பொன்விழா ஆண்டு, அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால், அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கும், அதிமுகவைக் காத்த ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள் என்று சசிகலா கூறினார்.

“நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதுகூட கழகத்தை ஆட்சியில் அமரவைத்துவிட்டுதான் நான் சென்றேன். தேர்தலில் நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று உங்களுக்கே தெரியும். என்னால் இந்த இயக்கத்துக்கு எள் முனையளவும் பாதிப்பு வந்துவிடக்கூடாது. என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன்.” என்று கூறினார்.

இப்போது சொல்கிறேன். கழகம்தான் நமக்கு கோயில், எம்.ஜி.ஆரின் தியாகத்தாலும் ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பாலும், வளர்ந்திருக்கும் அதிமுகவை காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என்று தொண்டர்கள் மத்தியில் சசிகலா கூறினார்.

தொண்டர்களிடம் இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒற்றுமைதான் என்று கூறிய சசிகலா, நீரடித்து நீர் விலகாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான், எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது என்று கூறினார்.

அதிமுகவின் அடிநாதமே தொண்டர்கள்தான் என்று எம்.ஜி.ஆர் கூறினார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று ஜெயலலிதா கூறினார் என்று மேற்கோள் காட்சி பேசிய சசிகலா, இந்த 50 ஆண்டுகளில் அதிமுக தமிழகத்தில் ஆட்சிக் காலத்தில் 33 ஆண்டுகள் தமிழக மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் இருந்தது. இந்த இயக்கம் இன்றைக்கு இரும்புக்கோட்டையாக மாறியிருக்கிறது என்றால், அதிமுகவின் இருபெரும் தலைவர்களும் தொண்டர்களும் தமிழக மக்களும்தான் இதற்கு காரணம் என்று கூறினார்.

மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால், நாம் தூக்கி எறியப்படுவோம் என்ற உண்மையை நாம் எல்லோரும் உணர வேண்டும். அதிமுகவுக்காக தொண்டர்களுக்காக மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் என்று சசிகலா கூறினார். இந்த நேரத்தில் அதிமுகவுக்காக உயிர் தியாகம் செய்த நல்ல உள்ளங்களை நினைவு கூர்வது நமது கடமையாகும். இந்த நன்னாளில் சிலவற்றை நினைவு கூர்கிறேன்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டது. அந்த சமயத்தில் இதே ராமாபுரம் தோட்டத்தில் ஜானகி அம்மா அவர்கள் என்னை அழைத்தார்கள். இங்கு வந்து அவருடன் பேசி ஒரு நல்ல முடிவு ஏற்பட்டது. அந்த அம்மாவே சொல்லிவிட்டார்கள் கட்சி ஒன்னு சேர வேண்டும். அதை நல்லபடியாக முடித்து கொடுத்தார்கள் அவர். அதுவும் இந்த வீட்டில்தான் நடந்தது. ஜெயலலிதாவின் பெரு முயற்சியால் அதிமுக மக்களின் பேராதரவோடு மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. அது போலவே எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பேராதரவோடு அதிமுக ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்.” என்று கூறினார்.

சசிகலாவின் இந்த பேச்சு அங்கே கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கைத்தட்டலைப் பெற்றது.

முன்னதாக, சசிகலா, அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின் தொடக்க நாளில் தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்துக்கு தொண்டர்களுடன் சென்றார். அங்கே அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து வைத்தார்.

அதிமுக 50வது ஆண்டு பொன்விழா நாளில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக பொன்விழா தொடக்க நாளில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிட்டனர்.

இதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அதிமுக தொடங்கப்பட்டு இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் அக்கட்சியின் தலைமை கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவின் பொன்விழா தொடக்க நாளில் சசிகலா, எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றியதோடு, அதிமுக பொதுச் செயலாளர் என்ற கல்வெட்டை திறந்து வைத்தார். அதோடு, ராமாபுரம் தோட்டம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் பேசிய சசிகலா அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ஒன்றிணைய ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்தார்.

சசிகலாவின் பேச்சு குறித்தும் அதிமுக பொது செயலாளர் சசிகலா பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்தும் பேசிய அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச் செயலாளர் ஆகிவிட முடியுமா சசிகலா என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. எங்களிடம் தான் கட்சிக்கொடி, சின்னம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் இதை தெரிவித்துவிட்டது. அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஆகிவிட முடியுமா? செஞ்சி கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியுமா? மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியுமா?

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வந்து 8 மாதங்கள் ஆகிறது. அவர் அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா?

பொன்விழா ஆண்டு அடுத்த ஆண்டு வந்தால், அவர் அடுத்த ஆண்டுதான் வெளியே வந்திருப்பார். பொன்விழா எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பொன்விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுவது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்?

1996 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு அவர்தான் காரணம். சசிகலாவின் குடும்பத்தினரால் தோல்வி ஏற்பட்டது.

சசிகலா தனது குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், வாழ்க்கைத்தரத்தில் உயர வேண்டும் என்று பாடுபட்டார். கட்சிக்காரர்களை சுரண்டி, சித்ரவதை, கொடுமை செய்ததை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள்.

வானத்தில் இருந்து குதித்த அவதாரம் போல் நான்தான் புரட்சித்தாய் என்று சொல்கிறார். எம்.ஜி.ஆர்.தான் புரட்சித்தலைவர். ஜெயலலிதாதான் புரட்சித்தலைவி. புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? தனது குடும்பத்துக்காகவே வாழ்ந்தார்.

எத்தகைய வழியில் வந்தாலும் தமிழக மக்களோ அ.தி.மு.க. தொண்டர்களோ ஒருநாளும் கொள்ளை கும்பலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரட்சித் தலைவிதான் நிரந்தர பொதுசெயலாளர். அவர் இல்லாவிட்டாலும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எங்களை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். அவரது நல்லாசியால் கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சட்டமன்ற தேர்தலில் 1 சதவீதத்தில்தான் நூலிழையில் தோல்வியை தழுவினோம். அந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு தி.மு.க. வெற்றி பெற்றது. இது போலியான வெற்றி ஆகும். 17 புகார்கள் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அ.தி.மு.க. தனித்துவம் மிக்கது. அடையாளம் கொண்டது. அந்த இயக்கத்தில் யாரும் குறுக்கிட முடியாது. அ.தி.மு.க. மாபெரும் சக்தி கொண்டது.” என்று ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக பொன்விழா கொண்டாட்ட துவக்க நாளில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக தரப்பில் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுக பொன்விழா கொண்டாட்ட நாளில் சசிகலா vs ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அரசியல் யுத்தம் தொடங்கியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ops Eps Aiadmk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment