Aiadmk | Tiruchirappalli | திருச்சி துவாக்குடியில் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை கண்டித்து பெரும் திறல் ஆர்ப்பாட்டத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, வாளவந்தான்கோட்டை சுங்கச் சாவடிக்கு அரை கிலோ மீட்டர் இடைவெளி கூட இல்லாமல், துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது சுங்கச் சாவடி பணிகள் முடிவுற்று 14.2.2024 அன்று முதல் சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
மக்கள் விரோத இச்செயலுக்கு, விடியா திமுக அரசும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் திருச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில், பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில், அரசு விதிகளுக்குப் புறம்பாகவும், மக்களவையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசையும் கண்டித்தும் 23.2.2024 - வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில், துவாக்குடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“