அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பகிர்ந்துள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35,000 ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும், திருவாரூர் , நாகை , தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும், வருகிற 6.10.2023 - (வெள்ளிக்கிழமை) அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், “இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ் மணியன், விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தலைமை தாங்குகின்றனர்.
இதில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“