திருச்சி மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலையில் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் கூட்டுறவு பண்டகசாலைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 15 பேர் தேர்தல் மூலமும், 5 பேர் நியமனம் மூலமும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றனர்.
இதில், திருச்சி அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் சகாதேவ பாண்டியன் தலைவராகவும், திருவெறும்பூர் அ.தி.மு.க பகுதி செயலாளர் பாஸ்கர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்து வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் வரும் 2024 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பண்டகசாலை தலைவர் சகாதேவ பாண்டியன் இறந்துவிட்டார். தலைவர் இறந்துவிட்டாலோ, பதவி காலியானாலோ அடுத்ததாக துணைத்தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு இயக்குனர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். பண்டகசாலையின் துணைத்தலைவராக உள்ள பாஸ்கர் தன்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சித்து வந்தார். ஆனால், பாஸ்கருக்கு மற்ற இயக்குனர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் கூட்டம் நடந்தபோது இயக்குனர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து பதிவு தபால் மூலம் இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் இயக்குனர்கள் கூட்டம் சிந்தாமணியில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில், 14 பேர் பாஸ்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தை கண்காணிக்க விரைவில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, இயக்குனர் குழு கலைப்படலாம் என தெரிகிறது.
அ.தி.மு.க-வில் நிகழும் உள்கட்சி பூசலே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க-வின் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமாரிடம் கேட்டபோது, “மொத்த உறுப்பினர்களில் மூன்று பேர் தெற்கு மாவட்டத்தில் வருகிறார்கள். மூன்று பேர் வடக்கு மாவட்டத்தில் வருகிறார்கள்.
13 பேர் மாநகர் மாவட்டத்தில் வருகிறார்கள். (மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் இப்போது ஓ.பி.எஸ் அணியில் இருப்பதால் இவர்களை பேசி ஒருங்கிணைக்க ஆள் இல்லாமல் போய்விட்டது) பிரச்னைகள் பேசி முடிக்கப்பட்டு விரைவில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“