அதிமுக புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆசி பெறுகிறார்கள். ஆனால் இவர்களில் யாரை முதலில் சந்திப்பது?
அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. ஆனால் மார்ச் 15-ல் டிடிவி தினகரன் மதுரையில் பெரும் ‘மாஸ்’ காட்டி, புதிய கட்சி தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுதாரித்தனர். இனியும் தாமதித்தால், நிர்வாகிகளில் மேலும் பலர் டிடிவி முகாமுக்கு பாயும் ஆபத்து இருப்பதாக பேச்சு எழுந்தது.
டிடிவி தினகரன் மாநாடு நடத்திய அதே மார்ச் 15-ம் தேதி இரவில் அதிமுக தலைமைக்கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நெடுநேரம் ஆலோசனை நடத்தினர். மறுநாளே அதிமுக.வில் பலருக்கு புதிதாக பதவிகள் அறிவிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான பொன்னையன், மனோஜ்பாண்டியன், மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகரன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் அமைப்புச் செயலாளர் பதவி பெற்றார்கள். இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பதவிகள் கிடைத்தன. அதாவது, பதவியில் இல்லாத குறிப்பிடத்தக்க முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தனர்.
தேனி மாவட்டச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவாளர் சையதுகான் பதவி பெற்றார். வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வெற்றிவேல், டிடிவி அணிக்கு போய்விட்டார். அந்த மாவட்டத்தை வடசென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு) என இரு மாவட்டங்களாக பிரித்து கிழக்குக்கு மதுசூதனனின் நெருங்கிய ஆதரவாளரான ஆர்.எஸ்.ராஜேஷையும், மேற்கு-க்கு இபிஎஸ் ஆதரவாளரான வெங்கடேஷ்பாபு எம்.பி.யையும் நியமித்தனர்.
அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியலில் மாநில நிர்வாகிகள் பெரும்பாலும் இருந்தார்களே தவரி, மாவட்ட வாரியாக இணை துணை, ஒன்றிய பதவிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையே அதிமுக.வில் புதிதாக சேர்கிறவர்களும், புதிதாக பதவி பெற்றவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறும் வழக்கமே இதுவரை இருந்தது. அந்த நடைமுறையை மாற்றி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் புதிய நிர்வாகிகள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தலைவராக இருந்தாலும், கட்சியைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னிர்செல்வத்திற்குத்தான் முதல் மரியாதை! அந்த அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி நடந்த சந்திப்புகளை முதல் இரு நாட்கள் இருவருமே வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியை சந்தித்தது செய்தி ஆனது.
இதைத் தொடர்ந்து இன்று (மார்ச்19) இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே தங்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றவர்களின் படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து புதிதாக பதவி பெற்ற அனைவருக்குமே இரு தலைவர்களையும் சந்தித்து ஆசி பெறவேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.
இரு தலைவர்களையும் சந்திப்பதில்கூட இப்போது பிரச்னையில்லை. இருவரில் யாரை முதலில் சந்திப்பது? என்கிற குழப்பம் புதிய நிர்வாகிகளிடம் கூடு கட்டியிருக்கிறது. ஆட்சியின் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்.ஸை முதலில் சந்திப்பதா, கட்சியின் முதல் பதவி என்ற அடிப்படையில் ஓபிஎஸ்.ஸை முதலில் சந்திப்பதா? என குழம்பிப் போயிருக்கிறார்கள்.
அதிமுக என்கிற கட்சியின் புதிதாக பதவி பெற்றதற்கான சந்திப்பு என்பதால், ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்.ஸை முதலி சந்திப்பதுதான் நியாயமாக இருக்கும். பொன்னையன் உள்ளிட்ட சிலர் ஓபிஎஸ்.ஸை முதலில் சந்தித்தார்கள். ஆனாலும் அப்படி ஓபிஎஸ்.ஸை முதலில் சந்தித்தால் தன்னை ஓபிஎஸ் அணி என முத்திரை குத்திவிடுவார்களோ? என இபிஎஸ் அணி நிர்வாகிகள் பதறுகிறார்களாம்!
யார், யார் எந்தத் தலைவரை முதலில் சந்திக்கிறார்கள்? என்பதையும் கட்சிக்குள் ஒவ்வொருவரும் கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கவும் செய்கிறார்களாம். இரட்டைத் தலைமை இருப்பதில் இப்படியும் ஒரு பிரச்னை!