தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்கட்சியான அதிமுக வெற்றி பெற விரும்புகிறது. அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், கட்சியில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் தலைமையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அடுத்து வந்த எல்லா தேர்தல்களிலும் தோல்விதான். 2019ம் மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் தமிழகத்தில் தேனியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. அடுத்து வந்த 2020ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுகவைவிட குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு, நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது.
இப்படி அதிமுக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அடுத்து வந்த எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நிரூபிக்க அதிமுக முயற்சி செய்கிறது. ஆனால், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பண்ணீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்னைகள் அக்கட்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதனால், தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால், அதிமுக தலைமை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்கு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு பிரிவினர் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி மறுபரிசீலனை செய்து வருகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இருவரும் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்திற்கு சமூகத்தில் முக்கிய புள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சென்னையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த காலத் தவறுகளை மன்னித்து புதிய தொடக்கம் அளியுங்கள் என்று கூறியது சசிகலாவைக் குறிப்பிட்டுதான் கூறினார் என்று பலரும் கூறினர். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய தலைவர்கள் கட்சிக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படும் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் இருவரின் அறிக்கைகள், சசிகலாவை முற்றிலும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடனும் ஆசியுடனும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த சமூக-பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.பத்மநாபன், ஐ.ஏ.என்.எஸ்.ஸிடம் கூறுகையில், “அதிமுகவில் ஒரு கவர்ச்சிகரமான தலைவர் இல்லை. அக்கட்சியில் அதற்கான வெற்றிடம் உள்ளது. முன்னாள் முதல்வர், மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் நிழலாகவும், துணையாகவும் விளங்கும் அதிமுக அரசியலுக்கு உள்ளேயும் வெளியேயும் தெரிந்த சசிகலாவை மீண்டும் கொண்டு வர வேண்டுமானால், ஸ்டாலின் எந்த அளவுக்கு முன்னேறி வருகிறார் என்பதை அதிமுகவினர் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். சசிகலா வந்து மீண்டும் அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டுவந்துவிடுவார் என்று கூறவில்லை. ஆனால், அவருடைய வருகை சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சசிகலா கவனமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் குழு உள்ளது. அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் அனைத்து மட்டத் தொண்டர்கள், தலைவர்களுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்.” என்று கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் தலைவர் கே.எல். முருகநாதன் ஐ.ஏ.என்.எஸ்.ஸிடம் கூறுகையில், “அதிமுக இப்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளது. அதிமுகவுக்கு மாறுபட்ட சிந்தனை தேவை. ஒரு ஆற்றல்மிக்க அரசியல் தலைவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அனுபவமும், திறமையும் பெற்றுள்ள சசிகலாவை மீண்டும் கட்சிக்குக் கொண்டுவந்தால், கட்சித் தொண்டர்களுக்கு ஓரளவு புத்துணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதுவே அவருக்குச் சாதகமாகும். அதை கட்சி பயன்படுத்திக் கொண்டால் அதிமுகவுக்கு புத்துயிர்ப்பு ஏற்படும். அதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தலைவர்களும் ஒன்றிணைந்து அவரை மீண்டும் கட்சிக்கு கொண்டு வந்து கட்சிக்கு உத்வேகம் தர வேண்டும். இல்லையெனில் கட்சி ஊசலாட வேண்டியிருக்கும். திமுகவுக்கு இரண்டாவது பிடில், பாஜகவின் தேசியத் தலைமையும் சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், புதுடெல்லியிலிருந்து வரும் தகவல்களின்படி, தமிழக அதிமுக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க தலைமைத்துவத்தின் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் இது தொடர்பான ஆலோசனைகள் நடந்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் சேர்ப்பதற்கு ஆதரவாக இருந்தாலும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையைத் தீர்க்கவில்லை என்றால் அது கட்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
எப்படியானாலும், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமைக்கு இடையே அதிமுகவில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவினரும் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.