/indian-express-tamil/media/media_files/2025/04/03/or18TB3ZlghXrGNeCvnj.jpg)
சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க-வினர் ஒன்றுபட வேண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தார். மேலும், அவர் பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து அ.தி.மு.க போட்டியிட்டால் தான் தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்று கூறினார்.
அத்தத்துடன், புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக-வுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்கள் தான்.
“நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்” என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அதிமுக தொண்டன். கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் “நானும் அரசியலில் இருக்கிறேன்” என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள சைதை துரைசாமி போன்றோருக்கு, அதிமுகவின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?
இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். அதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?” என்ற கேள்வியை சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.
அ.தி.மு.க-வை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும். இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது. எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜெயலலிதாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அதிமுக என்றும் பயணிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.