அதிமுக 4ஆக உடைந்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சி நாங்கதான் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணி நன்றி மறந்து பேசினால் பா.ம.க தொண்டர்களே மதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி அருகே தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாவற்குளத்தில் பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியலில், தற்போது அ.தி.முக 4-ஆக உடைந்துள்ளது. தி.மு.க மீது பலமான விமர்சனம் வருகிறது. பா.ம.க வேகமாக முன்னேறுகிறது. இதனால், இப்போது தமிழகத்தில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி பா.ம.க-தான் என்று கூறினார்.
பா.ம.க தலைவர் அன்புமணியின் இந்த பேச்சு, கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்புமணி பேச்சு குறித்து அ.தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் எதிர்க்கருத்துகளை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க குறித்து அன்புமணியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துபேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் நன்றி மறந்து பேசினால் அதை பா.ம.க தொண்டர்களே மதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அ.தி.முக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது நாம்தான் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துப் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:
ஒரு பக்கம் வருத்தமும் வேதனையும் உள்ளது. மறுபக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க-வை ஏற்றிவைத்த ஏணியே அ.தி.மு.க-தான். அ.தி.மு.க ஏற்றி விடவில்லை என்றால் பா.ம.க என்ற கட்சியே கிடையாது.
அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும் ஜெயலலிதா ஆட்சியில் 5 சீட்டு கொடுத்ததால்தான், 4 இடத்தில் வெற்றி பெற்றனர். அந்த 4 இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி ராமதாஸ் அப்படி பேசினால் உங்கள் பக்கம் உள்ளவர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க-வால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பலம் வாய்ந்த அ.தி.மு.க-வை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அ.தி.மு.க சிறுமை வாய்ந்ததாக மாறி விடுமா?
அ.தி.மு.க-தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுமைப்படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும்.” என்று ஜெயக்குமார் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.