Aiadmk Senthilnathan Join To Bjp : தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க கட்சியில் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் முன்னாள் மாநிலச் செயலாளரும், கரூர் மாவட்ட முன்னாள் செயலாளருமான வி.வி. செந்தில்நாதன் அக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைகிறார்.
அ.தி.மு.க கட்சியில் முக்கிய செயலாளர்களில் ஒருவரான வி.வி. செந்தில்நாதன், கடந்த 2011 ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் என இரு தேர்தல்களில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதில் அதிமுக கட்சியில் இருந்து தி.மு.க –விற்கு தாவிய செந்தில்பாலாஜி, ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் திமுகவிற்கு சென்றவுடன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் செந்தில்நாதன் போட்டியிட்டார். ஆனால் தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்கிய செந்தில் பாலாஜி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
தேர்தலில் போட்டியிட்ட இரண்டு முறையும் தோல்வியை தழுவிய செந்தில்நாதன் தற்போது கட்சி தாவும் முடிவை எடுத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம் தமிழக அமைச்சரவையில், போக்குவரத்துதுறை அமைச்சராக உள்ள எம்.ஆா். விஜயபாஸ்கா் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளரான செந்தில்நாதனை, அமைச்சர் விஜயபாஸ்கர் வளரவிடவில்லை என்றும், கட்சி விழாவிற்கு வரவிடாமல் தடுத்ததாகவும், தன்னை தவிர யாரும் வளரவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கடும் விரத்தியடைந்த செந்தில்நாதன் கட்சி தாவல் முடிவெடுத்து தற்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைகிறார். அ.தி.மு.க கட்சியில் ஜெயலலிதா இருந்தவரை நிர்வாகிகள் அனைவரும் தங்களது பணிகளை மட்டும் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் இல்லாத நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது தொகுதியில் உள்ள இளைஞர்களை வளரவிடாமல் தடுப்பது தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவுதல் தொடர்ந்தால், வரும் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே அ.தி.மு.க.வை விட்டுச்சென்று தனது சொந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி யை போல, பாஜனவில் இணைந்து செந்தில்நாதன் அரவங்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்துவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் அரவங்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்துவோம் என்று பா.ஜ.க மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், தற்போது செந்தில்நாதனின் வருகை அண்ணாமலை கருத்துக்கு ஏதுவாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"