Advertisment

கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை: கே.பி.முனுசாமி

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “தேசியக் கட்சிகளானாலும் சரி மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kp munusamy, aiadmk kp munusamy, kp munusamy attacks on bjp, kp munusamy attacks on national parties, கேபி முனுசாமி, அதிமுக, கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை, பாஜக, kp munusamy speech, no colition govt in tamil nadu

“தேசியக் கட்சிகளானாலும் சரி மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதிமுகவின் இந்த பிரச்சாரத் தொடக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “தேசியக் கட்சிகளானாலும் சரி மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. சிலர் சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர்; இதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி மேலும் பேசியதாவது: “எம்.ஜி.ஆர் பரப்புரை காரணமாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் ஆட்சி அமைக்கிறது. அப்படி ஆட்சி அமைக்கப்பட்ட திராவிட இயக்கம், 50 ஆண்டு காலமாக எந்த தேசியக் கட்சிகளையும் தமிழகத்திற்கு உள்ளே வரவிடாமல் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இதை இப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சில அரசியல் கைகூலிகள் உள்ளே நுழைய முயல்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணா மறைந்தார். அண்ணாவின் கொள்கைகளை வைத்து எம்.ஜி.ஆர் இயக்கத்தை தொடங்கினார். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவின் உண்மையான வாரிசு எம்.ஜி.ஆர் என்று மக்கள் வாக்களித்தார்கள். வாழுகின்றவரை இந்த நாட்டின் ஒரே தலைவராக இருந்து முதல்வராக இருந்து மறைந்தார். அவர் மறைவுக்குப் பின்பு இயக்கத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தது. ஜெயலலிதா வந்து இயக்கத்தைக் காப்பாற்றினார்கள். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றினார்கள். அவர் மறைந்த பிறகு, இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரும் தொண்டர்களும் அவர்களே நிர்வாகிகளும் அவர்களே, இதில் வாரி அரசியல் கிடையாது.

2021 சட்டமன்றத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில், அரசியல் வரலாற்றில் மாற்றம் ஏற்படுமா என்றெல்லாம் அவர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சில கருங்காலிகள் சொல்கிறார்கள்; திராவிட கட்சிகள் நாட்டை சீரழித்துவிட்டதாக சில தேசியக் கட்சிகள் சொல்கிறார்கள். சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு கூட்டம் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. நான் அவர்களிடம் கேட்கிறேன், இந்த ஆட்சி பல்வேறு துறைகளில் மத்திய அரசில் விருதுகளைப் பெற்றிருக்கிறது என்றால் இது எவ்வளவு திறமைமிக்க ஆட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல்நிலை மாநிலம். மருத்துவத்தில் புரட்சி செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் எடப்பாடி பழனிசாமியின் அரசு தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குளைத் திறந்து புரட்சி செய்துள்ளது.

அதற்குக் காரணம் நீண்ட நெடியகாலமாகக் கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நம்மை வழிநடத்திச் சென்ற எம்ஜிஆர், ஜெயலலிதா இன்று இல்லை. அவர்களை எதிர்த்து அரசியல் நடத்திய கருணாநிதி இன்று இல்லை. அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாகப் போர்க்களத்தில் நின்ற இந்தத் தலைவர்கள் இன்று இல்லாத சூழ்நிலையில் இந்தத் தேர்தலில் எப்படியாவது நின்று வெற்றிபெற்று விடலாம் என்று பலவிதக் கணக்குகளைப் பலர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை 50 ஆண்டுகாலம் வெற்றிகரமாக திராவிட இயக்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்யும் இயக்கம் அதிமுகவாகத்தான் இருக்கும். அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமை ஏற்போம். வெற்றி பெறுவோம்.

எந்த தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி. அதிமுக தலைமையில்தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எந்த தேசியக் கட்சியாவது, அரசியல் கட்சியாவது வந்தால் அக்கட்சியினர் சிந்தித்துக் கொள்ளுங்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. எங்களைப் பொறுத்தவரையில் அண்ணாவின் கொள்கை, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை, இங்குள்ள தலைவர்களின் கொள்கை, அதிமுகவின் கடைசித் தொண்டனின் கொள்கையும் அதுதான் என்று சொல்கிறேன்” என்று பேசினார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளதோடு மட்டுமில்லாமல், பாஜக தேசியத் தலைமையையும் கவனிக்க வைத்துள்ளது.

தேசியக் கட்சிகளை மறைமுகமாக சாடும் கே.பி.முனுசாமியின் பேச்சு அரசியல் ஆர்வமுள்ள நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் விமர்சிக்கவும் செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Aiadmk Ops Eps Kp Munusamy Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment