AIADMK Latest News: 2021 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, வழிகாட்டும் குழுப் பட்டியலை இபிஎஸ் வாசித்தது, வழிகாட்டும் குழுவில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெற்றது என இன்னும் கட்சி அதிகாரத்தில் இபிஎஸ் தனது பிடியை விடவில்லை. முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக் காட்சிகள் இதையே உணர்த்தின.
அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் ஓபிஎஸ் பேசியது இதுதான்... ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே, இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்களே’ என ஆரம்பித்தார் ஓபிஎஸ்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ‘ஏற்கனவே கழக பொதுக்குழு தீர்மானப்படி வழிகாட்டும் குழு நிர்வாகிகள் பெயரை இங்கு அறிவித்திருக்கிறார்கள். அதில் இடம் பெற்ற 11 பேருக்கும் நல் வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாமானியரும் உச்ச பதவிக்கு வர முடியும் என்ற சரித்திர சகாப்தத்தை படைத்த அறிஞர் அண்ணா, தொடர்ந்து 3 முறை சரித்திர வெற்றி பெற்று நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அதன்பிறகு இந்த இயக்கத்திற்கு வந்த சோதனை வேதனைகளை தாங்கி இந்த இயக்கத்தை உச்ச நிலையில் அமர்த்தினார் புரட்சித் தலைவி.
இந்த இயக்கமும் ஆட்சியும் தொண்டர்கள் கையில் இருக்கவேண்டும் என்கிற கனவு இன்று நனவாகியிருக்கிறது. இதற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 2021 தேர்தல் கட்சியின் முதல் அமைச்சர் வெற்றி வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’ என்றார் ஓபிஎஸ். உடனே இபிஎஸ்.ஸை வாழ்த்தி தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
இந்த அறிவிப்பு நிகழ்வில் வழிகாட்டும் குழு உறுப்பினர்கள் பட்டியலை இபிஎஸ்.ஸும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை ஓபிஎஸ்.ஸும் வெளியிட்டனர். இதன் மூலமாக கட்சியில் தனக்கான இணை அதிகாரத்தை இபிஎஸ் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். வழிகாட்டும் குழுவிலும் 6-5 என இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு பங்கீடு செய்திருக்கிறது.
இதன் மூலமாக முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் முன்னிறுத்தப்படும் பட்சத்தில், கட்சி முழுமையாக ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் செல்லும் என கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் இதில் இறங்கி வந்திருக்கும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் குழுவில் 5 இடங்களை கொடுத்ததன் மூலமாக இபிஎஸ்.ஸும் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"