D Jayakumar: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழா நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த விழாவில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர் என்று அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி அவர்களால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதைபோல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று முன்தினம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!
புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!
அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர்." என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“