மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி சால்வை அணிவித்தது குறித்து அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை (ஜனவரி 16) நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி, அவருடைய மகன் இன்பநிதி, அமைச்சர் மூர்த்தி கண்டுகளித்தனர். அப்போது, இன்பநிதியின் நண்பர்களை அமர வைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை இருக்கையில் இருந்து எழுந்திருக்க சொன்னதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. ஆனால், இதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார்.
அதே போல, அமைச்சர் மூர்த்தி, துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு பொது நிகழ்ச்சியில் சால்வை அணிவித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணச் சென்ற உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி சால்வை அணிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் டி. ஜெயக்குமார் கூறுகையில், “பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகள் ட்ரெண்டாகும். ஆனால், இன்றைக்கு தேவையில்லாத ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகியிருப்பது வருத்தப்படக் கூடிய ஒரு விஷயம், அதுவும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நிற்கிற நிலைமையும் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் அவர்களோடு இருக்கிற நண்பர்களும் உட்கார வேண்டும் என்பதற்காக கலெக்டரை நிற்க வைப்பது நியாயமா? கலெக்டர் இதற்கு பேட்டி கொடுத்தார்கள். அவர்கள் என்ன எதிர்த்தா பேட்டி கொடுப்பார்கள்? எதிர்த்து பேட்டி கொடுத்தால் அதற்கு பிறகு, அவர்கள் ட்ரசரி டிபார்ட்மெண்டில் தான் இருப்பார்கள். கலெக்டர் பதவியில் இருந்து தூக்கி விடுவார்கள். அவர் மனசுக்குள் புழுங்கி கொண்டு வெளியில் வந்து பேட்டி கொடுத்தார்கள் அது தெரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இதை உலகம் முழுவதும் பார்த்தார்கள். இது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், எல்லா இடங்களிலும் இடிஅமின் உடைய மன்னராட்சி சர்வாதிகாரம் தலை தூக்கி இருக்கிறது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சம்பவமும் ஒரு சாட்சி” என்று டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய டி.ஜெயக்குமார், “இரண்டாவது ஒரு அமைச்சர் என்கிறபோது அவருக்கு என ஒரு கண்ணியம் இருக்கிறது மாண்பு இருக்கிறது. அரசியலமைப்பு ரீதியாக உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ளார், அவருக்கு சால்வை அணிவிக்கிறீர்கள். ஆனால், இன்பநதிக்கு சால்வை அணிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? உண்மையிலேயே சொல்கிறேன், கேமரா மட்டும் இல்லையென்றால் இன்பநிதி காலிலேயே விழுந்து இருப்பார் அமைச்சர் மூர்த்தி.” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாகச் சாடினார்.
அமைச்சர் மூர்த்தி குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசிய டி.ஜெயக்குமார், “எவ்வளவு பெரிய அறிவிலியாக, அறிவில்லாத இந்த ஸ்டாலின் மாடல் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கிறார்கள் என்றால் புத்திசாலித்தனமாக கேட்கிறார். அமைச்சர்தான் முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதை ரெப்ரெசெண்ட்டேட்டிவ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறுகிறார். அப்போது நீங்கள் யார், இப்படிப்பட்டவர்கள் அறிவில்லாத சூழலில் தமிழ்நாட்டில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு வருத்தத்துக்குரிய, வேதனைக்குரிய விஷயமாக நான் கருதுகிறேன்” என்று டி.ஜெயக்குமார் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.