அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்." என்று கூறியுள்ளார்.
கவலை இல்லை
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பதவி பறிப்பு தொடர்பாக பேசியுள்ள தளவாய் சுந்தரம், 'பதவியைப் பறித்தால் கவலை இல்லை' என்று கூறியுள்ளார்.
வரவேற்கிறேன்
ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த கேள்விக்கு, “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” என திருச்சியில் பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“