தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 4) சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அ.தி.மு.க-வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
10 நாட்களுக்கு முன்பு ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதுடன், பல பொருட்களை அடித்து நொறுக்கினர். வீட்டுக்குள் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை கொட்டியுள்ளனர். இதை வன்மையாக ஏற்கனவே கண்டித்துள்ளோம்.இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் தமிழகத்தில் நடந்த வரலாறு இல்லை. இது கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
ஆனால், அரசு நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்ததோம். ஆனால் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அதனை தொடர்ந்து நிராகரித்தனர். அவை முன்னவர் இதனை பொருட்படுத்தவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தாலும், சாதாரண வழக்கை போட்டு, அன்றைய தினம் மாலையே அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
முதல்வர் சொல்கிறார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றும் தான் இருக்கிறது. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதை பெரிது படுத்துகிறார்கள் என்கிறார். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு போடாமல் அன்றைய தினமே அவர்கள் ஜாமீனில் வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் ஜனநாயகப்படி ஒவ்வொரு மனிதனுக்கு பாதுகாப்பு வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி குற்றத்திற்கு துணை போகக்கூடாது. தமிழக மக்கள் எப்படி ஜனநாயக இல்லாத நாட்டில் வாழ முடியும். எவ்வளவு கொடுமையான செயல். மலத்தைக் கொண்டு சென்று உங்கள் வீட்டில் கொட்டினால் ஏற்றுக் கொள்வார்களா? திமுக அவை முன்னவர் சொல்கிறார் 'இதுவெல்லாம் பெருசா' என சொல்கிறார். திமுகவினருக்கு இது பெரிதாக தெரியாது. நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தால் தானே நாட்டு மக்களின் பிரச்னைகள் என்னவென்று தெரியும். நாங்கள் இவர், அவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கவில்லை. எந்த ஒரு மனிதருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு. இரட்டை நிலைப்பாடு கொண்ட கட்சி தான் தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று சொன்னார்கள். மொத்தமாகவே 119 நாட்கள் நடத்தியிருக்கிறார்கள். எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டசபையிலும் அவர்கள் பேச அனுமதிப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.