அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் மட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக தலைமை இரங்கல் தெரிவித்து அதிமுக 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று அதிமுக தலைமை ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு குறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அதிமுக அவைத்தலைவரும் மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சாருமான மதுசூதனன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர், எம்ஜிஆர்-க்காக எதையும் எதையும் தியாகம் செய்ய துணிந்த ரசிகர், புரட்சி தலைவர் கண்ட பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்கத்தின் தொடக்கநாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும் வரை ஓயாது உழைத்த உடன்பிறப்பு. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படை தளபத்; தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்கள்ல் வைத்துக் கொண்டாடிய அதிமுகவின் வேர்களில் ஒருவர் என பலவாறாகவும் மதுசூதனனைப் பற்றி வரலாறு சொல்லும். அதிமுகவின் சோதனையான காலக்கட்டங்களில் அதிமுகவை கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய கழகத்தின் தூண் சரிந்ததே என்று கண்ணீர்க் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரத் இழப்பு, அதிமுகவுக்கும் புரட்சித் தலைவரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மதுசூதனன் 1959ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற்த்தைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து வடசென்னை பகுதியில் எம்.ஜி.ஆர் பெயரில் மன்றங்களை அமைத்து சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர் பெயரில் இரவு பாடசாலைகளைத் தொடங்கியவர்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உடன் பிறப்புகள் அனைவராலும் ‘அஞ்சா நெஞ்சன்’ என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன், எம்ஜிஆர் இயக்கம் தொடங்கியபோது, எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதைக் கண்டித்து சிறையில் இருந்துள்ளார். அதிமுகவிற்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்.
வடசென்னை மாவட்டத்தில் பகுதிக் கழகச் செயலாளராக, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராகப் பணியாற்றிய மதுசூதனனை எம்.ஜி.ஆர் தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்.
ஜெயலலிதா 1991ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, அவரை சட்டமன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டு சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றினார்.
ஜெயலலிதாவின் நல்லாசியோடு, 05.02.2007 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மதுசூதனன் அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை சீரிய முறையில் அதிமுகவின் பணிகளை ஆற்றி வந்தவர்.
ஏறத்தாழ 70 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் புகழ்பாடி, அதிமுக வளர்ச்சிக்காக பாடுபட்டு வாழ்நாளெல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் விசுவாசத் தொண்டராக வாழ்ந்து மறைந்த மதுசூதனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களின் சார்பிலும் எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி, 05.08.2021 முதல் 07.08.2021 வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதே போல், தமிழ்நாடு மற்றும் அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும்; அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளனர்.
மதுசூதனன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுசூதனன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அதிமுகவின் அவைத் தலைவராக பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும். இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர். ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வரும் தற்போதை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் மறைவுச் செய்தியை அறிந்து பெரும்துயரமும் சொல்லொண்ணா சோகமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “எம்ஜிஆர் காலம் தொட்டு அதிமுகவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அதிமுகவின் மூத்த முன்னோடி, ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன். மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளர்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: “மதுசூதனன் மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, எத்தனையோ சோதனையான காலத்திலும் துணை நின்றவர். தலைவரிடத்திலும், அம்மாவிடத்திலும் மிகுந்த பாசம் கொண்டவர். தலைவர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், 2007ம் ஆண்டு முதல் அவைத் தலைவராக இருந்தபோதிலும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். மதுசூதனைன் மறைவு செய்தி கேட்டு துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இளவயதிலேயே புரட்சித் தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்.மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.