அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வி, சட்டப்பேரவை தேர்தல் தோல்வி அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திவந்தது. இந்த நிலையில், அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக நிற்க, மறுபுறம் ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் கூட்டம் நடைபெற்றபோது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்தில் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து ஓபிஎஸ் பொருள்களை திருடிச் சென்றுவிட்டார் என்று அவர் மீது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் புகார் அளித்தார்.
தொடர்ச்சியாக ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் |ஆர்.பி. உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.
அதேபோல் கட்சியின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் பொருளாளர் பதவி முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது.
இதற்கான கடிதத்தை அதிமுகவின் 7 கணக்குகள் மற்றும் 2 வைப்புத் தொகை கணக்கை நிர்வகிக்கும் வங்கிகள் ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை இயக்குனருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான்தான் இதுவரை செயல்பட்டுவருகிறேன். ஆகவே முறைகேடுகளை தடுக்கும்வண்ணம் அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வைப்புத் தொகை கணக்குகளை முடக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.