அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் டெல்லி சென்று திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியையும் செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர்.
ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து என்ன பேசினார்கள் என்ற விவாதங்கள் தமிழக அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் இரட்டை தலைமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 25ம் தேதி தனித்தனியாக டெல்லி சென்றனர்.
இதையடுத்து, ஜூலை 26ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது, கிருஷ்ணா கோதாவரி காவிரி நதிகள் இணைப்பை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக தெரிவித்தார். சசிகலா அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்துகிறாரே அதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பியபோது, இபிஎஸ் பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால் சந்திப்போம் என்று கூறினார்.
இதையடுத்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலாசாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோரை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க முயற்சி செய்தனர். கர்நாடக மாநில புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் விவகாரம், அஸ்ஸாம் - மிசோரம் மாநிலங்கள் இடையே எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபடிருந்ததால் அதிமுக தலைவர்களை ஜூலை 25ம் தேதியே சந்திக்கவில்லை. இந்த சூழலில்தான், செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) காலை 11.15 மணிக்கு உள்துறை அமித்ஷாவுடன் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமித்ஷாவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் நவநீதகிருஷணன், மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகரன், மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் சுமார் 15 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்தவுடன் ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியை சந்தித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் கிஷண் ரெட்டி பணியாற்றினார். அதனால், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் கிஷண் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு பவன் வந்த இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
டெல்லிக்கு தனித்தனியாக சென்ற ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்த பிறகு, ஓபிஎஸ் சென்னை வழியாக மதுரைக்கும் இபிஎஸ் பெங்களூரு வழியாக சேலத்துக்கும் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு வந்தடைந்தனர்.
ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசிவிட்டு வந்ததையடுத்து, இருவரும் பிரதமரிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் என்ன பேசினார்கள் என்ற தமிழக அரசியல் களத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமர் மோடி, ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் இருவரையும் ஒன்றாகவும் பிறகு தனித்தனியாக சந்தித்து பேசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.